காஸா பூசல்: உடனடிச் சண்டைநிறுத்தத்திற்கு மலேசிய, நியூசிலாந்து பிரதமர்கள் அழைப்பு

1 mins read
761711dd-a2ff-4e52-af27-8a5645255ba7
புத்ராஜெயாவில் நடைபெற்ற வரவேற்புச் சடங்கிற்குப் பின்னர், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் (வலது) நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்ஸோனும் பேசிக்கொண்டிருக்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: காஸாவில் நடக்கும் பூசலுக்கு உடனடிச் சண்டைநிறுத்தம் வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்ஸோனும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இருநாட்டுத் தீர்வுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தற்போதைக்குச் சண்டைநிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு என்று பிரதமர் அன்வார் கூறினார். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சண்டையை நிறுத்தக்கூடிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து ஈடுபாடு குறைவாக இருப்பதை அவர் சுட்டினார்.

முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மலேசியா, பாலஸ்தீனத்திற்குப் பெரும் ஆதரவு காட்டி வருகிறது.

பாலஸ்தீனக் குழுவான ஹமாசுக்கும் திரு அன்வாருக்கும் இடையே நல்லுறவு உள்ளது.

இருப்பினும், அவர்களின் ராணுவ நடவடிக்கைகளில் தமக்கு எந்தவோர் ஈடுபாடும் இல்லை என்று திரு அன்வார் கூறிவருகிறார்.

இந்நிலையில், மலேசியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு லுக்ஸோன், மலேசியாவுடனான தற்காப்பு ஒத்துழைப்பை நியூசிலாந்து விரிவுபடுத்தும் என்று கூறியிருக்கிறார்.

கூட்டுப் பயிற்சி ஒன்றுக்காக, மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள பட்டர்வொர்த்திற்கு நியூசிலாந்து அதன் ஆகாயப் படைகளின் சுற்றுக்காவல் விமானத்தை அனுப்புவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்