தீபாவளி நேரத்தில் விலை ஏற்றத்தைத் தடுக்க மலேசியாவில் நடவடிக்கை

தீபாவளி நேரத்தில் விலை ஏற்றத்தைத் தடுக்க மலேசியாவில் நடவடிக்கை

1 mins read
c9f5c43d-a736-4ed9-b847-45a1dbf5c0dc
இந்தியாவின் சிறிய வெங்காயமும் அதிகபட்ச விலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: பெரிய வெங்காயம், ஆஸ்திரேலிய பருப்பு உள்ளிட்ட எட்டு அத்தியாவசியப் பொருள்களை பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டத்தின்கீழ் கொண்டு வந்துள்ளது மலேசிய அரசாங்கம்.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருள்களின் தேவையற்ற விலை ஏற்றத்தைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை நடப்பில் இருக்கும்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிஸான் முகம்மது அலி இந்த விவரங்களை வியாழக்கிழமை (அக்டோபர் 24) செய்தியாளர்களிடம் கூறினார்.

தக்காளியும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறிய, இளஞ்சிவப்பு வெங்காயங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

மேலும், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி, தேங்காய் ஆகியன மொத்த விற்பனைக்கான அதிகபட்ச விலைப் பட்டியலிலும் துருவிய தேங்காய் சில்லறை விற்பனை அதிகபட்ச விலைப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டு உள்ளன.

தேவை மற்றும் விநியோகம், தற்போதைய விலை, பருவநிலை, ஊதிய விகிதம் போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு அதிகபட்ச விலைகளும் அவை நடப்பில் இருக்கும் காலமும் நிர்ணயிக்கப்பட்டதாக திரு அர்மிஸான் கூறினார்.

தீபாவளிக்காக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் அதிகபட்ச மொத்த விலையையும் சில்லறை விலையையும் தமது அமைச்சின் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

திட்டம் நடப்பில் இருக்கும் காலத்தில் பொருள்களின் விலைகளை நாடு முழுவதும் கண்காணிக்க தமது அமைச்சில் இருந்து அமலாக்க அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் அர்மிஸான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்