சுபாங் ஜெயா - மலேசியாவின் சுபாங் ஜெயா நகரில் உள்ள புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பு வட்டாரத்தில் எரிவாயு குழாய் வெடித்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற இன்னமும் காத்திருக்கின்றனர்.
ஆறு மாத வாடகையைச் சமாளிக்க சிலாங்கூர் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 2,000 ரிங்கிட் வழங்குவதாகக் கூறியிருந்தது. அதோடு கல்வியமைச்சிலிருந்து பள்ளிக்கு உதவியாக 500 ரிங்கிட்டும் சொந்தப் பயன்பாட்டுக்கு தற்காலிகமாக ஒரு காரும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
ஏப்ரல் முதலாம் தேதி எரிவாயு குழாய் வெடித்ததில் 81 வீடுகள் சேதமடைந்தன. அதில் 57 வீடுகள் கடுமையாகச் சிதைந்தன.
ஏப்ரல் 30ஆம் தேதி, வாடகையைச் சமாளிக்க பாதிக்கப்பட்ட 455 குடும்பங்களுக்கு 2.73 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வாடகை பணம் குடியிருப்பாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் போடப்படும் என்று சிலாங்கூர் முதலமைச்சர் அமிருடின் ஷாரி கூறினார்.
214 குடும்பங்கள் உதவித் தொகையைப் பெற்றுள்ளதாகச் சொன்ன திரு அமிருடின், பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்குகள், அடையாள அட்டைகள் ஆகிய ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எரிவாயு குழாயின் செயல்பாடும் வழக்கநிலைக்கு வந்துவிட்டது என்று தங்களிடம் கூறப்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்பது குறித்த அச்சம் இருப்பதாக அவர்கள் கூறினர்.
பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு மாதம் பயன்படுத்த இலவச கார்களைக் கொடுத்தன. இப்போது அந்தக் கால அவகாசம் முடிந்துவிட்டதால் கூடுதல் மாதத்துக்கு கார்களைப் பயன்படுத்த 1,000 ரிங்கிட்டிலிருந்து 3,000 ரிங்கிட் வரை செலுத்த வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வெடிப்பில் சேதமடைந்த காருக்கான கடன் தவணைகளைக் கட்டி வருவதால் நிதிச் சுமை அதிகமாகியிருப்பதாக அவர்கள் கூறினர்.
மலேசியாவின் வீடமைப்பு அரசாங்கம் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்கும் என்று கூறியிருந்தது.

