கோலாலம்பூர்: இந்த ஆண்டில் ஒரு மில்லியன் இந்தியப் பயணிகளின் வருகையை எட்ட மலேசிய அரசாங்கம் வகுத்திருந்த இலக்கு முன்கூட்டியே எட்டப்பட்டுவிட்டது. இதனை மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்து உள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் வரை இந்தியாவில் இருந்து 1,009,114 பேர் மலேசியா வந்ததாக அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பயணிகளின் வருகை 47 விழுக்காடு அதிகம் என்றார் அவர்.
அதேபோல, 2023ஆம் ஆண்டு ஜனவரி-நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 71.7 விழுக்காடு வளர்ச்சியை உணர்த்துவதாக திரு தியோங் தெரிவித்தார்.
மலேசியா சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று என இந்தியப் பயணிகள் கருதுவது அதற்குக் காரணம் என்றார் அவர்.
குறிப்பாக, விசா இல்லாத அனுமதி 2023 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் இருந்து சுற்றுப் பயணிகளாக வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அந்த வசதி, பயணத்துக்கான புதிய வாய்ப்புகளை அளித்ததோடு பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததாக திரு டியோ கூறியுள்ளார்.
மேலும், இவ்வாண்டு இந்தியாவில் இருந்து மலேசியாவின் பல நகரங்களுக்கு விமானச் சேவை அறிமுகம் செய்யப்பட்டதும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு மற்றொரு காரணமாகும்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் இண்டிகோ விமான நிறுவனம், இம்மாதம் பினாங்கு, லங்காவி போன்ற நகரங்களுக்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்ததற்கு நல்ல பலன் கிட்டி உள்ளது.
ஏற்கெனவே இந்திய நகரங்களில் இருந்து கோலாலம்பூருக்கு அந்த நிறுவனம் விமானச் சேவைகளை நடத்தி வருகிறது,” என்று திரு டியோ விளக்கினார்.
மலேசியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி ‘மலேசியாவுக்கு வாருங்கள்- 2026’ என்னும் பிரசாரத்திற்கு வலுவூட்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.