சாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசியா மறுப்பு

சாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசியா மறுப்பு

படம்: பெர்னாமா

03 Nov 2026 - 4:30 pm

2 mins read

கோலாலம்பூர்: இஸ்லாமிய சமய போதகர் சாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என்று மலேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) அறிவிக்கப்பட்டது.

அச்சமய போதகர் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவ்வாறு அவரை அனுப்ப எவ்வித உத்தரவாங்களும் அளிக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். இந்தியாவுடன் 2010ல் மலேசியா செய்துகொண்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் வழங்கும் உரிமைகளின்படியும் அதற்கு முன்னர் 1992ல் இயற்றப்பட்ட கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் விதிமுறைகளின் அடிப்படையிலும் மலேசியாவின் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.

அவரை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் அதிகாரபூர்வ கோரிக்கை 2018 ஜனவரி 18ஆம் தேதி பெறப்பட்டது. பிறகு, 2020 மே 29ஆம் தேதி அக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி அரசதந்திரக் கடிதம் இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது என்பதையும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தற்போதைய நிலையில் அவரை அனுப்பிவைக்கும்படி எவ்விதப் புதிய கோரிக்கையும் மலேசிய அரசாங்கத்திடம் இந்தியா முன்வைக்கவில்லை என்றார் அவர்.

“இந்தியாவுக்கு சக்கிர் நாயக்கை அனுப்பவேண்டாம் என்று மலேசியா முடிவு செய்துள்ளது. எனவே அவரை அனுப்பிவைக்கும் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை,” என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தியா மலேசியாவுடன் செய்துள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து கிளாந்தான் மாநிலத்தின் கோத்தா பாருவில் உள்ள பெங்கலான் செப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அகம்மது மர்சுக் ஷாரி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அவரது கருத்துகளை வெளியிட்டார்.

கடந்த செப்டம்பர் 18ல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் இந்த விவகாரம் குறித்து பேசியதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்