கோலாலம்பூர்: கட்டங் கட்டமாக மியன்மார் நாட்டவரை மீண்டும் அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கும் திட்டத்தை மலேசியா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) தொடங்கியுள்ளது.
பல மனித உரிமைப் குழுக்களும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் அதைச் செய்யவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தும், மலேசிய அரசாங்கம் அவர்களை வெளியேற்றும் செயல்பாட்டை நிறுத்தவில்லை.
மியன்மாரின் ராணுவ ஆட்சியினருடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, மலேசியாவில் உள்ள 5,000 வரையிலான மியன்மார் நாட்டவர் மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அவ்வாறு நாடுதிரும்புவோர் கண்டிப்பாக அவர்களின் சொந்த விருப்பப்படியே செல்கின்றனர் என்று மலேசியா கூறிவருகிறது.
ஆனால் மனித உரிமை அமைப்புகளும் ஐநாவும், உள்நாட்டுப் போர் தொடரும் நிலையில் நாடு திரும்பும் மியன்மார் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன.
பல ஆண்டுகளாக மலேசியாவில் வாழும் மியன்மார் மக்கள், குறிப்பாக, ரோஹிங்யா இனத்தவர் மலேசியர்களால் வரவேற்கப்பட்ட சமூகம் என்று எடுத்துக்கொள்ளமுடியாது. அகதிகள் முகாமில் பலர் வாழும் நிலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் மிக அரிதாக உள்ளது.
அடிக்கடி மலேசியக் குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் சோதனைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 1,500 மியன்மார் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
காவல்துறை பாதுகாப்புடன் அவர்கள் வடமேற்குப் பகுதியில் உள்ள லுமுட் வட்டாரத்தின் கடற்படைத் தளம் அருகில் இருக்கும் மஞ்ஜுங் விளையாட்டரங்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
செய்தியாளர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆவணங்களைச் சோதித்த பிறகு அவர்கள் கப்பலில் மியன்மாருக்கு மீண்டும் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் எத்தனைப் பேர் ரோஹிங்யா இனத்தவர் என்பது மலேசிய அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை.
மலேசியாவில் அடைக்கலம் அடைந்த 190,000 மியன்மார் மக்களில் மூன்றில் இரு பங்கினர் ரோஹிங்யா இனத்தவர் என்று ஐநா தெரிவித்தது.
