பெட்டாலிங் ஜெயா: முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்துக் கோவில்களை இடிப்பதை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்திற்குத் தேசிய இந்துக் கோவில் வழிகாட்டிக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அக்குழு முதன்முறையாகத் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) கூடி, ஆலோசனை நடத்தியது.
கோவில்களை இடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது முறையான சரிபார்ப்பு, ஈடுபாடு, தீர்வுகளை ஆராய்வதை அனுமதிக்கும் என்றும் குழு கூறியது.
அதன்மூலம், தேவையற்ற பதற்றத்தைத் தடுக்கவும் முறையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் முடியும் என அது தெரிவித்தது.
“கோவிலை அகற்றுவதைத் தவிர்க்க முடியாதெனில், தெய்வச் சிலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற உரிய நடைமுறைகளின்படி, முதலில் அதற்கான சடங்குகளைச் செய்தாக வேண்டும். அவை மதிப்புடனும் அமைதியாகவும் நடப்பதற்கு, அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று வழிகாட்டிக் குழு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
லாப நோக்கமற்ற இந்திய அமைப்புகள் மற்றும் குடிமைச் சமூகக் குழுக்களின் ஆதரவுட்அன் மலேசிய இந்துச் சங்கமும் மலேசிய இந்தியர் சங்கமும் இணைந்து அந்தக் குழுவை அமைத்தன.
பண்பாட்டு, சமய உணர்வுகளை மனத்திற்கொண்டு அமலாக்க அமைப்புகள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் குழு வலியுறுத்தி இருக்கிறது.
கோவில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல என்றும் அவை தங்கள் சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள் என்றும் அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட கோவில்களுக்கான நடைமுறைத் தீர்வுகளை அடையாளம் காணும் இலக்குடன் கோவில் நிலங்களை முறைப்படுத்தும் திட்டத்தை மேற்கொள்வோம் என்றும் அது தெரிவித்தது.
அதன்படி, கோவில்கள் தங்கள் நிலம், நிர்வாகம் சார்ந்த தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
“சரிபார்க்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தங்கள் சட்டத் தகுதிநிலை சார்ந்து, கோவில்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். பின்னர், பாதிக்கப்பட்ட கோவில்களுக்குக் குழு நேரடியாகச் சென்று, சட்ட அடிப்படையிலும் ஆக்கமுறையிலும் பிரச்சினைகளைத் தீர்க்க உரிய பங்காளிகளுடனும் அதிகாரிகளுடனும் இணைந்து பணியாற்றும்,” என்று குழு தெரிவித்தது.
மலேசியாவில் இந்துக் கோவில்கள் நில உரிமை, ஒழுங்குமுறைச் சவால்களை எதிர்கொண்டுவரும் வேளையில் வழிகாட்டிக் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

