கோலாலம்பூர்: ஒருவரை விசாரணையின்றி 28 நாள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை மலேசியா அரசாங்கம் மறுபரிசீலனைச் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதனை சிவில் சமூகக் குழுக்கள் பல வரவேற்றுள்ளன. பிற சில அமைப்புகள் அச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
சோஸ்மா (Sosma) எனப் பரவலாகக் குறிப்பிடப்படும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம், பொது ஒழுங்கிற்கு எதிரான மிரட்டல்களைச் சமாளிக்க 2012ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
அப்போது முதல் இச்சட்டத்தை ரத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
பிப்ரவரி 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், இந்தச் சட்டம் மறுபரிசீலனைச் செய்யப்பட்டு சாத்தியமான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.
சோஸ்மா வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது, பிணை வழங்க வழியில்லாத விதிமுறையை மதிப்பிடுவது, 28 நாள் தடுப்புக் காவலில் வைக்கும் காலத்தை பரிசீலிப்பது உள்ளிட்டவை மறுபரிசீலனையில் அடங்கும்.
இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட 73 குற்றங்களில் எவற்றுக்கு பிணை வழங்குவதை நீதிமன்றங்களின் விருப்பத்திற்கு விடலாம் என்பதை நாங்கள் தீர்மானிக்கவிருக்கிறோம் என்று அமைச்சர் சைஃபுடின் மேலும் தெரிவித்தார்.
முன்பு, இத்தகைய வழக்குகளில் பிணை அனுமதிக்கப்படாததை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரியில் சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் சோஸ்மாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

