மலேசியா: 216 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல், 394 பேர் கைது

மலேசியா: 216 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல், 394 பேர் கைது

2 mins read
820423a0-a47f-46d7-8690-b2050d5c08cf
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய வட்டாரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகக் காவல்துறை மூத்த உதவி ஆணையர் ஹக்கிமால் ஹவாரி தெரிவித்தார். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் 2026 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 9 வரை 216 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடர்பில் 394 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மத்தியப் பிரிவு பொதுச் செயல்பாட்டுப் படையின் எல்லைப் பகுதிக்குள் வரும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 140 அதிரடிச் சோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை மூத்த உதவி ஆணையர் ஹக்கிமால் ஹவாரி தெரிவித்தார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய வட்டாரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 6ஆம் தேதி இடம்பெற்ற ‘ஆப்பரேஷன் ஹசார்ட் 3.0’ நடவடிக்கையின்போது பலவகைப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் திரு ஹக்கிமால் கூறினார்.

எங்கிருந்து மின்கழிவுகள் மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் அவர் சொன்னார்.

மின்கழிவுகள் நேரடியாகத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன என்றும் அவற்றுள் சில உரிமமின்றி இயங்கி வந்ததாகவும் திரு ஹக்கிமால் குறிப்பிட்டார்.

முறையான உரிமம் பெறாமல் மின்கழிவுகளைத் தொழிற்சாலை செய்முறைகளுக்கு உட்படுத்தியது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறாமல் தொழிற்சாலைகள் செயல்பட்டது, சுற்றுச்சூழல் தலைமை இயக்குநரிடமிருந்து முறையான அனுமதி பெறாமல் மின்கழிவுகளைக் கையாண்டது உள்ளிட்ட குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வாண்டி யத்ஸித் யாக்கோப் விளக்கினார்.

குற்றச்செயல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அவற்றுடன் தொடர்புடையோர்க்கு 10 மில்லியன் ரிங்கிட்வரை அபராதம், ஐந்தாண்டுவரை சிறை, அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

இதனிடையே, தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொது ஒழுங்கைப் பேணவும் காவல்துறை, குறிப்பாக மத்தியப் பிரிவு பொதுச் செயல்பாட்டுப் படை தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று திரு ஹக்கிமால் தெரிவித்துள்ளார்.

கடத்தல் நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதுபற்றி உடனே காவல்துறையிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்புடைய எந்தப் பொருளும் மலேசியாவிற்குள் நுழையாமல் தடுப்பதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்