கோலாலம்பூர்: மலேசியா அதன் விற்பனை வரியைத் திருத்தி அமைக்கிறது. அதே சமயம் அதன் சேவை வரியை விரிவுபடுத்துகிறது.
இந்த மாற்றம் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது. இத்தகவலை மலேசிய நிதி அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 9) வெளியிட்டது.
அரசு வருமானத்தை அதிகரிக்கவும் நிதிநிலையை வலுப்படுத்தவும் மலேசிய அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுக்கிறது.
அத்தியாவசியப் பொருள்களுக்கும் சொகுசு பொருள்களுக்கும் ஐந்து விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடு வரை விற்பனை வரி உயர்த்தப்படும்.
விரிவுபடுத்தப்படும் சேவை வரியில் சொத்து வாடகை அல்லது குத்தகை, கட்டுமானம், நிதிச் சேவைகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, அழகுச் சேவை ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படும்.
“நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தவும் மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் சமூகப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை இலக்கு கொண்டுள்ளது,” என்று அமைச்சு கூறியது.
விற்பனை, சேவை வரி படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இதுகுறித்து வணிகங்கள் அக்கறை தெரிவித்ததால் மே மாதம் நடைமுறைப்படுத்தப்பட இருந்த வரி விரிவாக்கம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வரிவிதிப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரி விரிவாக்கத்தை ஒத்திவைக்கும்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனம் மலேசிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.
வரி விரிவுபடுத்தப்பட்டால் அது இவ்வாண்டுக்கான செலவுகளை அதிகரிக்கும் என அது தெரிவித்தது.
இரட்டிப்பு வரிவிதிப்பைத் தவிர்க்க சில விதிவிலக்குகள் இருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் மலேசியர்களுக்கு அதற்கான வரி விதிக்கப்படாது என்று நிதி அமைச்சு உறுதி அளித்தது.
வரி தொடர்பான விதிமுறைக்கு உட்படாத நிறுவனங்களுக்குத் தண்டனை விதிக்கும் முறை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு கூறியது.