அராவ்: மலேசியாவில் வியாழக்கிழமை (அக்டோபர் 29) கெரெத்தாப்பி தானா மலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) ரயில்மீது கல் வீசி, அதன் பெட்டியின் கண்ணாடியைச் சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட 14 வயதுச் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ‘சினார் ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் இடைநிலைப் பள்ளியில் பயிலும் அந்தச் சிறுவன், அராவ் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் அராவ் காவல் நிலையப் பணிக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ‘ஆப் கன்டாஸ்’ நடவடிக்கையின்கீழ் சனிக்கிழமை பிடிபட்டான்.
கம்போங் ஜெலம்போக் மோட்டார்சைக்கிள் மேம்பாலத்தில் இருந்தபோது, வேண்டுமென்றே ரயில்மீது கல் எறிந்ததை அந்தச் சிறுவன் முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டதாக அராவ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அகமது மோசின் முகமது ரோடி தெரிவித்தார்.
சம்பவத்தின்போது அப்பகுதியில் நண்பர்கள் நால்வருடன் நின்றிருந்ததாகவும் அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்த நிலையில் தான் கல்லை எறிந்ததாகவும் சிறுவன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அராவ் நிலையத்திலிருந்து அலோர் ஸ்டார் நோக்கிச் சென்ற ரயிலின் கண்ணாடி உடைந்ததாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு அராவ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கம்போங் குவார் சாஞ்சியிலுள்ள ஒரு வீட்டில் அச்சிறுவன் கைதுசெய்யப்பட்டான். அவனிடமிருந்து விவோ ஒய்05 வகைக் கைப்பேசி, சிம் அட்டை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கல் ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிறுவன்மீது முந்தைய குற்றப் பதிவுகள் ஏதும் இல்லாத நிலையில், விசாரணைக்கு உதவ கங்கார் காவல் நிலையக் காவலில் அவன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
