கோலாலம்பூர்: மலேசியாவில் டுரியான் பழ விநியோகத்தில் நிலவும் தேக்கத்தைக் குறைக்கும் நோக்கில், புதிய தரைவழி ஏற்றுமதிப் பாதை ஒன்றை அமைப்பது குறித்து மலேசியா ஆராய்ந்து வருகிறது.
இதன்மூலம் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதுடன், சீனாவில் செல்வந்தர்கள் வசிக்கும் கடலோர நகர்களைத் தாண்டி மற்ற பகுதிகளிலுள்ள பயனீட்டாளர்களையும் சென்றடைய மலேசியா திட்டமிட்டுள்ளது.
புதிய டுரியான்களை லாரிகள் மூலம் தரைவழியாகச் சீனாவுக்குக் கொண்டு செல்வதற்கான தரைவழிப் பாதையை அமைப்பது குறித்து மலேசிய அரசாங்கம் சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது நாளொன்றுக்கு ஏறத்தாழ 40 டன் புதிய டுரியான்கள் மட்டுமே விமானம் மூலம் சீனாவுக்கு அனுப்பப்படும் வேளையில், குறைந்த செலவிலான தரைவழிப் பாதை அமைக்கப்பட்டால் அதிக அளவிலான பழங்களை அனுப்ப முடியும் என்றும் அது உள்நாட்டில் நிலவும் தேக்கத்தைச் சமாளிக்க உதவும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
தற்போது டுரியான் விளைச்சல் உச்சத்தில் இருக்கும் ஆகஸ்ட் இறுதிக்குள், சந்தையில் பழங்கள் தேங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, 7 மில்லியன் ரிங்கிட் (S$2.2 மி.) மதிப்பிலான 1,000 டன் டுரியான்களை மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் கொள்முதல் செய்யவுள்ளது.
வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு, ஏற்றுமதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளூர் டுரியான் தொழில்துறை சார்ந்தவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
டுரியான்களைத் தரைவழியாகக் கொண்டு செல்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது அதிக அளவிலான பழங்களை அனுப்ப வழிவகுப்பதோடு, போக்குவரத்துச் செலவை 40 விழுக்காடு வரை குறைக்கும் என்று இந்த விவகாரத்தை நன்கறிந்த மலேசிய அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

