தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: மலேசியா

2 mins read
ff1be889-86c2-433d-b057-d52c3d531ff6
மஜித் புத்ராவில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கான (ஜூன் 7) வழிபாட்டை முடித்தபிறகு திரு அன்வார் மலேசியர்களைச் சந்தித்துப் பேசினார். - படம்: மலேமெயில்

கோலாலம்பூர்: காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் நாடுகளும் வளைகுடா கூட்டமைப்பு (ஜிசிசி) நாடுகளும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மஜித் புத்ராவில் ஹஜ்ஜுப் பெருநாள் (ஜூன் 7) வழிபாட்டை முடித்த பிறகு திரு அன்வார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது இக்கருத்தைத் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களின் நீண்டநாள் துயரத்தையும் துன்பத்தையும் நீக்க வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று திருவர் அன்வார் குறிப்பிட்டார்.

காஸாவுக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும், ஆனால் மலேசியா போன்ற ஒரு நாட்டின் ஆதரவு மட்டும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராது என்று அவர் கூறினார்.

காஸா தொடர்பில் வளைகுடா நாடுகளும் மலேசியா போல் ஒரே எண்ணம் கொண்டுள்ளன என்றார் மலேசியப் பிரதமர் அன்வார்.

“இஸ்ரேலின் அட்டூழியத்தை ஒடுக்க வேண்டும் என்றால் ஆசியான் நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் சில நாடுகள் ஒற்றுமையாக முன்னின்று உலக நாடுகளுக்கு அழுத்தம் தந்து தெளிவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும்,” என்று திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், காஸாவில் போர் நடவடிக்கையை நிறுத்த முடியாமல் திணறும் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் இயலாமை குறித்து மலேசியா ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

பலமுறை வாக்கெடுப்பு நடத்தியும் பாதுகாப்பு மன்றத்தால் அமைதியை நடைமுறைப்படுத்த முடியவில்லை, அவசர உதவிப் பொருள்களைக் காஸாவுக்குள் கொண்டு செல்லப் பல கட்டுப்பாடுகள் உள்ளன என்று மலேசியா வருத்தப்பட்டது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ராணுவ மற்றும் ஆயுத உதவிகளைக் கொடுத்து வரும் நாடுகளின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, இது அனைத்துலக சட்டத்திற்கு எதிரான ஒன்று என்று மலேசியப் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை வெளியிடுகின்றன. ஆனால் அதே நேரம் ராணுவ உதவியும் செய்து வருகின்றன என்று திரு அன்வார் குற்றஞ்சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகாஸாஇஸ்‌ரேல்