கோலாலம்பூர்: அமெரிக்காவுக்குத் தாங்கள் ஏற்றுமதி செய்யும் அறைகலன்கள், வாகன, விமானச் சாதனங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்குமாறு மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.
மலேசிய வர்த்தக அமைச்சு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) இதனைத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத கொக்கோ, பனை எண்ணெய் போன்ற விளைபொருள்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது. அதுகுறித்து வரும் அக்டோபர் மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முன்னதாக, பெர்னாமா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மேலும் பல பொருள்கள் மீது அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) வரி விதித்தார். சமையலறை அறைகலன்கள், குளியலறை அலங்கார வேலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு திரு டிரம்ப் 50 விழுக்காடு வரி விதித்திருந்தார். துணி, தோல் மற்றும் இதரப் பொருள்களால் போர்த்தப்பட்டு மென்மையாக்கப்பட்ட (upholstered) அறைகலன்களுக்கு 30 விழுக்காடு வரி விதித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா, மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 19 விழுக்காடு வரி விதித்திருந்தது. அதன் தொடர்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் மலேசியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன.

