மலேசியாவில் $480 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

2 mins read
57adc301-f2ed-4af1-be73-81c9e4fc6241
மலேசியாவில் இதுவரை பிடிபட்டுள்ள போதைப்பொருள்களில் இது மிகப் பெரிய அளவிலானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள்கள் சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கில் டிசம்பர் 16ஆம் தேதி பிடிபட்டுள்ளன.

அவற்றின் சந்தை மதிப்பு S$486.36 மில்லியன் (1.53 பில்லியன் ரிங்கிட்) எனவும் 68.5 மில்லியன் போதைப் புழங்கிகளுக்கு அவை விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள்களின் எடை 18 டன்கள் ஆகும்.

அனைத்துலக போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு சந்தேக நபர்கள் சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று உள்ளூர் ஆடவர்களும் மூன்று வெளிநாட்டு பெண்களும் அடங்குவர்.

போதைப்பொருள்களை தயாரிக்கும் கூடம் மூன்று மாடி தனியார் பங்களா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

செராஸ் வட்டாரத்தில் நடைபெற்ற முதல் சோதனையில் அந்த ஆறு சந்தேக நபர்களும் பிடிபட்டதாக புக்கிட் அமான் போதைக் குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநர் ஹுசைன் ஒமர் கான், தலைநகர் காவல்துறை தலைமையகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சோதனைகளில் பிடிபட்ட பலவகை போதைப்பொருள்களில் 14.49 டன் எடையுள்ள கெட்டமின், 4 டன் எடையில் எக்ஸ்டசி போன்றவை உள்படும்.

உள்ளூரைச் சேர்ந்த அந்த மூன்று ஆடவர்கள் கூடங்களில் போதைப் பொருள்களை தயாரித்து பின் பல இடங்களில் பதுக்கி வைத்திருந்தனர். கைதான மூன்று வெளிநாட்டு பெண்கள் ஆடவர்களின் காதலிகள் ஆவர் என்று திரு ஹுசைன் விளக்கினார்.

இந்தக் கும்பல் அனைத்துலக அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி, ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்பட்டு வந்துள்ளது. வீடுகளையும் வர்த்தக இடங்களையும் போதைப்பொருள் தயாரிப்புக்கும் சேகரிப்புக்கும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

கைதாவதற்கு முன்பாக வெளிநாடுகளுக்கு பல ஏற்றுமதி நடவடிக்கைகள் நடந்துள்ளன எனவும் அதிகாரிகள் கூறினர். ஆடவர்கள் மூவரும் போதைப்பொருள் உட்கொண்டது சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கும்பல் பயன்படுத்திய ஆறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் டிசம்பர் 23ஆம் தேதி வரை தடுத்துவைக்கப்படுவர்.

குறிப்புச் சொற்கள்