கோலாலம்பூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பாக மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய நாடுகள் கூடுதல் ஒத்துழைப்புக்குத் திட்டமிட்டிருப்பதாக மலேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த முத்தரப்பு ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலை இந்நாடுகள் தொடங்கிவிட்டன.
சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் அயர்லாங்கா ஹார்டார்டோ ஆகியோருடன் திரு ஸஃப்ருல் அண்மையில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் சந்தித்துப் பேசினார்.
கூடுதல் ஒத்துழைப்பு பற்றி அதிகாரபூர்வக் கலந்துரையாடலை நடத்துவதற்கு முன்பு அதுகுறித்து மேலும் ஆய்வு நடத்த மூவரும் இணக்கம் தெரிவித்தனர்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் ஏற்கெனவே ஆக்கபூர்வ மேம்பாடுகளைப் பார்த்துவிட்டதை அமைச்சர் ஸஃப்ருல் சுட்டினார்.
அதை முத்தரப்பு ரீதியில் விரிவுபடுத்தினால் முக்கிய அனுகூலங்கள் கிடைக்கும் என்றார் அவர்.
ஆனால், அதற்கு முன்னதாக அதுகுறித்து மிகுந்த கவனத்துடன் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், பாத்தாம், பிந்தான், கரிமுன் ஆகியவற்றுக்கு முதலீட்டாளர்களையும் வர்த்தகங்களையும் ஈர்க்க மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளுடனான முத்தரப்பு ஒத்துழைப்பில் ஈடுபடுவது குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக அக்டோபர் 24ஆம் தேதியன்று துணைப் பிரதமர் கான் தெரிவித்திருந்தார்.

