கோலாலம்பூர்: ஒருபாலினச் சந்திப்புக்கான கைப்பேசிச் செயலிகளைத் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருபாலினத்தவர் சந்தித்து மகிழ கிரிண்டர் (Grindr), புளூட் (Blued) போன்ற கைப்பேசிச் செயலிகளில் வசதி உள்ளது.
அத்தகைய செயலிகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் மலேசியாவின் தகவல் தொடர்பு, பல்லூட ஆணையம் ஈடுபட்டு வருவதாக தொடர்புத்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
அந்தச் செயலிகளை அகற்றுமாறு கேட்டு இதுவரை ஆணையத்துக்கு எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்றபோதிலும், அந்தச் செயலிகள் தொடர்பான இணையத்தளங்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டுவிட்டதாக அமைச்சு கூறியது.
ஒருபாலினச் சந்திப்புக்கான செயலிகள் மலேசியாவுக்கு வெளியிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுவதாக எழுத்துபூர்வமான பதிலில் புதன்கிழமை (பிப்ரவரி 25) அமைச்சு கூறியது.
உள்நாட்டில் இயக்கப்படும் இணையத்தளங்கள் சட்டத்துக்குப் புறம்பான உள்ளடக்கங்களில் இருந்து விலகி இருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட ஆணையம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், விதிமீறும் எந்தவோர் உள்ளடக்கம் அல்லது செயலிகளுக்கு எதிராக ஆணையம் நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக, ஆபாசமான, ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்கள், மோசடிகள், குழந்தைக் கொடுமைகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவற்றைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சு கூறியுள்ளது.

