கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது மகன் முகம்மது நசிஃபுதீன் ஆகியோருக்கு எதிரான நொடிந்துபோன நடவடிக்கைக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
திரு நஜிப் 1.69 பில்லியன் ரிங்கிட், அவரது மகன் நசிஃபுதீன் 37.6 மில்லியன் ரிங்கிட் வரி பாக்கியைச் செலுத்தவில்லை என நொடிந்துபோன நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4), வழக்கை விசாரித்த நீதிபதி அல்விபா அப்துல் வகாப் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்தத் தடையை ஏகமனதாக அனுமதித்தது.
நொடிந்துபோகும் நிலை வெறும் பண இழப்பல்ல, அது மீள முடியாத கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், நஜிப், அவரது மகன் இருவருக்கும் தலா 30,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நஜிப் மற்றும் அவரது மகன் தொடர்புடைய வரி வழக்குகள் செப்டம்பர் மாதமும் அக்டோபர் மாதமும் நடக்கும் என்று மலேசிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


