கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளுக்கான மென்மையான விளையாட்டுப் பொருள்களில் (squishy toys) உரிய பாதுகாப்பு முத்திரை இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனைகளில் 5,801 விளையாட்டுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மொத்த மதிப்பு 70,428 ரிங்கிட் (S$22,000) ஆகும்.
மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தச் சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான பாதுகாப்புத் தரநிலைகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் 15 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளின் போது உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள் என மொத்தம் 1,845 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர் என்று அமைச்சின் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் அஸ்மான் ஆதம் தெரிவித்தார்.
“குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களின் பாதுகாப்பை அமைச்சு மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1999ன் கீழ் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் எந்தவொரு தரப்புடனும் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களை வாங்குவதற்கு முன்பாக அவற்றில் சரியான பாதுகாப்பு முத்திரைகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
