பொது நிதியைப் பாதிக்காமல் ஏர்ஏஷியாவுக்கு உதவுவது குறித்து மலேசியா பரிசீலனை: ஆண்டனி லோக்

பொது நிதியைப் பாதிக்காமல் ஏர்ஏஷியாவுக்கு உதவுவது குறித்து மலேசியா பரிசீலனை: ஆண்டனி லோக்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

13 Nov 2026 - 7:36 pm

2 mins read

கோலாலம்பூர்: பொது நிதிக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏர்ஏஷியா நிறுவனத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்து மலேசியா பரிசீலித்துவருகிறது என்று இவ்வாரம் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

அதோடு, அரசாங்கம் அந்தத் தனியார் விமான நிறுவனத்திற்கு வெறுமனே நிதியை வாரி வழங்காது என்றும் அவர் கூறினார்.

உயர்வான விமான எரிபொருள் விலையையும் நாணய மாற்று மதிப்பின் ஏற்றத்தாழ்வுகளையும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா சமாளித்துவருகிறது.

அதற்கு நிதியுதவி அளிப்பதற்கான பல்வேறு தெரிவுகளை நிதி அமைச்சு இன்னும் மறுஆய்வு செய்துவருவதாக அமைச்சரவைக் கூட்டங்களில் நடந்த கலந்தாலோசனைகளை மேற்கோள்காட்டி திரு லோக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைப்போல் அல்லாமல், ஏர்ஏஷியா ஒரு தனியார் நிறுவனம் என்று திரு லோக் தெரிவித்தார். அதற்கு அளிக்கப்படும் எந்தவோர் ஆதரவும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“அது ஓர் அதிகாரபூர்வமான ஏற்பாடாக இருக்க வேண்டும். அரசாங்கம் பணத்தை வாரி வழங்கப்போவதில்லை,“ என்று அவர் தெரிவித்தார்.

பரிசீலனையில் உள்ள தெரிவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்த அவர், எந்தவொரு நிபந்தனை குறித்தும் நிதி அமைச்சராகவும் உள்ள பிரதமர் அன்வார் இப்ராகிம் முடிவெடுப்பார் என்று கூறினார்.

நிதி அமைச்சும் ஏர்ஏஷியா நிறுவனமும் கருத்துத் தெரிவிப்பதற்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை.

1எம்டிபி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைச் சிறையிலிருந்து விடுவித்து, அவரது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதித்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் திரு லோக் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பதவி விலகிய மறுநாளான புதன்கிழமை அன்று அளித்த நேர்காணலில் அவர் அண்மைய கருத்துகளைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்