மலேசியா: 341,000 ரிங்கிட் மதிப்பிலான உடல் எடைக் குறைப்பு மருந்து பறிமுதல்

மலேசியா: 341,000 ரிங்கிட் மதிப்பிலான உடல் எடைக் குறைப்பு மருந்து பறிமுதல்

படம்: பிக்சாபே

02 Nov 2026 - 6:40 pm

1 mins read

கோலாலம்பூர்: உடல் எடையைக் குறைக்கும் ‘ரிடாட்ருடைட்’ (Retatrutide) மருந்துகளை மலேசிய சுகாதார அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.

கடன்த 2025ஆம் ஆண்டுமுதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம்வரை 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள அந்த மருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக அவற்றை விற்பனை செய்தவர்களைக் குறிவைத்து அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு அதிரடிச் சோதனைகளை நடத்தியது.

12 அமலாக்கச் சோதனைகளில் 341,000 ரிங்கிட் மதிப்பிலான 697 ‘ரிடாட்ருடைட்’ மருந்துப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறினார்.

அத்துடன், சட்டவிரோதமாக விற்கப்பட்ட ‘ஓசெம்பிக்’, ‘செமாக்ளுடைட்’ போன்ற 64,170 ரிங்கிட் மதிப்பிலான 62 மருந்துகளையும் அமைச்சு பறிமுதல் செய்தது.

சமூக ஊடகங்களில் அந்த மருந்துகளை விளம்பரப்படுத்தி, இணையம்வழி அவற்றை விற்பனை செய்வோர்மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

‘ரிடாட்ருடைட்’ மருந்து மலேசியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தில் இன்னும் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, அதனை மலேசியாவில் விற்பனை செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ அனுமதி இல்லை.

குறிப்புச் சொற்கள்