கோலாலம்பூர்: மலேசியாவில் மின்னூட்ட நிலையங்களை அமைக்கும் நிறுவனங்களில் செய்யப்படும் தனியார் துறை முதலீட்டால் மின்வாகனங்களுக்கான மின்னூட்ட வசதிகள் அதிகளவில் உருவாக்கப்படுவதாக அந்நாட்டு முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் சிம் சி சின் கூறியுள்ளார்.
பயனீட்டாளரின் தேவை, மின்னூட்ட வசதிகளை அமைப்பதற்கான செலவு, குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகத்திற்கான தயார்நிலை ஆகியவற்றைத் தனியார் முதலீட்டாளர்கள் கருத்தில் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
“மின்வாகனங்களுக்கான மின்னூட்ட வசதியை புறநகர்ப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் அமைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. பொதுமக்கள் மின்னூட்ட வசதிகளை எளிதில் பெறவேண்டும்,” என்றார் திரு சிம்.
இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி மலேசியாவில் 7,341 பொது மின்னூட்ட வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மின்னூட்ட வசதிகள் பெருநகரங்களில் மட்டும் பொருத்தப்படாமல் சிறிய நகரங்களுக்கும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் திரு சிம் சுட்டினார்.
புறநகர்ப் பகுதிகளிலும் சிறிய நகரங்களிலும் வசிப்போர் தேவைக்கு ஏற்ப தனிப்பட்ட மின்னூட்ட வசதிகளைத் தங்கள் இல்லங்களில் பொருத்திக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
2030ஆம் ஆண்டுக்குள் நாடளவில் 30,000 மின்னூட்ட வசதிகளை அமைக்கவேண்டும் என்று மலேசிய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
அதை அடைய மாநில அரசாங்கங்கள், உள்ளூர் அதிகாரிகள், வளாக உரிமையாளர்கள், பயனீட்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோருடன் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சு இணைந்து செயல்படுகிறது என்றார் திரு சிம்.
மின்னூட்ட நிலையங்களை அமைக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும்படி தனியார் துறை முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைய முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மின்னூட்ட வசதிகளைப் பெருக்க, மின்னூட்ட நிலையங்களை அமைக்கும் நிறுவனங்கள், புறநகர்ப் பகுதிகளிலும் சிறு நகரங்களிலும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும்படியும் திரு சிம் அறிவுரை வழங்கினார்.
