இஸ்கந்தர் புத்ரி: ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகியவற்றுடன் இணைந்து அடுத்த ஈராண்டுகளில் 92 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அனைத்துலகத் திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மலேசியா தயாரிக்க உள்ளது.
இது மூன்று நாடுகளிலும் உள்ள படப்பிடிப்பு நிலையங்களின் கூட்டு முயற்சி என்று மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமத் நசீர் கூறியுள்ளார்.
இஸ்கந்தர் மலேசியா ஸ்டூடியோஸ் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், “இந்த கூட்டு முயற்சி மலேசியத் திறனாளர்கள், விநியோகிப்பாளர்கள், படப்பிடிப்பு நிலையங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமையாளர்களுக்கு அனைத்துலகத் தயாரிப்புகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கும்,” என்றார்.
“மேலும், அவர்களின் நீண்டகாலத் திறன்களையும் மேம்படுத்தும். புதிய யோசனைகள் மற்றும் திறமைகளாலேயே மலேசியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி வடிவமைக்கப்படும்,” என்றும் திரு அக்மால் நஸ்ருல்லா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் ‘சேண்ட்பைப்பர் என்டர்டெயின்மென்ட்’, தென்கொரியாவின் ‘கிரீன் ஃபிஷ் ஸ்டுடியோ’ மற்றும் பிற வட்டாரப் படப்பிடிப்பு நிலையங்களுடன் இணைந்து மலேசியாவின் ‘ஓஎம்ஜி ஸ்டூடியோஸ்’ தலைமையிலான இந்தக் கூட்டு முயற்சி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
