கோலாலம்பூர்: மலேசியா, வட்டார அளவில் தனக்குச் சொந்தமான அல்லது சொந்தம் என்று கூறப்படும் தென்சீனக் கடல் உள்ளிட்ட நீர்ப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் கடற்படை, ஆகாயப் படைகளை வலுப்படுத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பந்தப்பட்ட நாடுகளுடனான அரசதந்திர உறவு சார்ந்த அம்சங்களையும் மலேசியா கருத்தில்கொண்டு செயல்படும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (NSC) தலைமை இயக்குநர் ராஜா நுஷிர்வான் ஸைனால் அபிடின் கூறியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய கடல்துறைக் கழகத்தின் தென்சீனக் கடல் மாநாடு 2024 நிகழ்ச்சியில் புதன்கிழமையன்று (டிசம்பர் 18) அவர் 300 பேராளர்களிடம் பேசினார். அரசதந்திரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த மாநாட்டில் பேராளர்களாகப் பங்கேற்றனர்.
கடல்துறை தேசம் என்று மலேசியாவுக்கு இருக்கும் பெயரை வலியுறுத்தும் நோக்கில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மன்றம் புதிய தேசியப் பாதுகாப்புத் திட்டத்தை வரையும் என்று திரு ராஜா நுஷிர்வான் குறிப்பிட்டார். அத்திட்டம், 2019 மலேசிய தற்காப்பு வெள்ளை அறிக்கையை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பெரிய கடற்படை, ஆகாயப் படைகளை உருவாக்குவதில் அந்த வெள்ளை அறிக்கை கவனம் செலுத்துகிறது; இந்த அம்சம் முன்னதாக அதிகம் வலியுறுத்தப்படவில்லை என்று திரு ராஜா நுஷிர்வான் சொன்னார்.
“கடற்பகுதியில் நமக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மட்டுமே இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை நான் அனைவருக்கும் வலியுறுத்த விரும்புகிறேன். கடல்துறையில் தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள இயலாத தேசத்தால் சக்திவாய்ந்த கடல்துறை நாடாக உருவெடுக்க முடியாது. ஆதிக்கம் செலுத்துவது நோக்கமல்ல.
“மலாக்கா நீரிணை, தென்சீனக் கடல் இரண்டுக்கும் அருகே உள்ள ஒரே நாடான நாங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கிலிருந்து ஐந்து விழுக்காட்டைத் தற்காப்புக்காக செலவிட்டால் அது வட்டார அளவில் பதற்றத்தை உருவாக்கும். அது, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்,” என்று திரு ராஜா நுஷிர்வான் சுட்டினார்.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் தற்காப்புக்கென மலேசியா 21.1 பில்லியன் ரிங்கிட்டை (6.38 பில்லியன் வெள்ளி) ஒதுக்கியுள்ளது. அத்தொகை, 2024ல் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காடாகும்.

