தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டில் மகாதீருக்குச் சொத்து; மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

2 mins read
393f4fc4-c670-4b11-9189-ba2e161442d9
விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது தாம் தொடுத்த அவதூறு வழக்கைக் காலந்தாழ்த்துவதற்கான முயற்சி என்றும் 100 வயதான டாக்டர் மகாதீர் சாடினார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது சொத்துகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படுவது தொடர்பான விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விரிவுபடுத்தியுள்ளது.

இதனை உறுதிப்படுத்திய ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆசம் பாக்கி, தமது அமைப்பு பிரிட்டனின் அனைத்துலக ஊழல் தடுப்பு ஒத்துழைப்பு மையத்துடன் அணுக்கத் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.

ஆயினும், பிரிட்டனில் டாக்டர் மகாதீருக்கு ஏதேனும் சொத்துகள் உள்ளனவா என்பதன் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

அத்துடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் திரு மகாதீருக்குச் சொத்துகள் உள்ளனவா என்பது குறிந்து ஆராய்ந்து வருவதாகவும் இப்போதைக்கு பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும் திரு ஆசம் தெரிவித்தார்.

நேர்மை, தலைமைத்துவ நாளை முன்னிட்டு புதன்கிழமை (செப்டம்பர் 24) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.

முன்னதாக, தமது சொத்துகள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளுடன், குறிப்பாக பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் மலேசிய அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் புதிராக இருப்பதாக இம்மாதம் 11ஆம் தேதி ஒரு ஃபேஸ்புக் பதிவு மூலம் டாக்டர் மகாதீர் தெரிவித்திருந்தார்.

இந்த விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது தாம் தொடுத்த அவதூறு வழக்கைக் காலந்தாழ்த்துவதற்கான முயற்சி இது என்றும் 100 வயதான டாக்டர் மகாதீர் சாடினார்.

அவ்வழக்குத் தொடர்பில் பதிலளிக்க திரு அன்வார் இரு வாரங்கள் அவகாசம் கேட்ட நிலையில், ஈராண்டுகள் கடந்துவிட்டபோதும் அவ்வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டாக்டர் மகாதீர், அவரின் குடும்பத்தினர், உதவியாளர்கள் ஆகியோர் தொடர்புடைய சொத்துகளைக் கண்டறிந்து மீட்பதற்காக பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இணைந்து செயல்பட்டு வருவதாக இம்மாதம் 7ஆம் தேதி பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்