கோலாலம்பூர்: புருணை–மிரி எல்லையிலுள்ள சுங்கை துஜோ சோதனைச்சாவடியில், அக்டோபர் 31-ம் தேதி 100 கிலோவுக்கும் அதிகமான ‘ஷாபு’ போதைப்பொருளுடன் புருணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மலேசிய ஆடவருக்கு முன்னதாக இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சரவாக் மாநிலத்தின் மிரியைச் சேர்ந்த 46 வயது சந்தேக நபர், கைது செய்யப்பட்டபோது சாபா மாநிலத்துக்குச் செல்லும் வழியில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.
ஏறத்தாழ 5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாகக் கணக்கிடப்பட்டுள்ள கிட்டத்தட்ட 100 கிலோ ஷாபு’ போதைப்பொருளுடன் அந்த ஆடவர் பிடிபட்டது தொடர்பாக புருணையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்திடமிருந்து தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
சரவாக் மாநிலத்தின் மிரியிலிருந்து புருணைக்குள் நுழைந்தபோது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன்பு அந்நாட்டை ஒரு போக்குவரத்துப் பாதையாகப் பயன்படுத்த அவர் திட்டமிட்டிருந்ததாகவும் புருணை போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தகவல்கள் தெளிவுபடுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், சுல்தான் ஹாஜி ஒமார் அலி சைஃபுதீன் பாலம் வழியாக தெம்புரோங் பகுதிக்குச் செல்வதற்கு முன்னதாக, அந்தச் சந்தேக நபர் கோலா பெலாயிட், செரியா, துத்தோங், பண்டார் செரி பெகாவான் ஆகிய பகுதிகள் வழியாகப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது என்று திரு உசேன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, லாபு–மெங்கலாப் பாதை வழியாக சரவாக்கிற்குள் மீண்டும் நுழைந்து, பின்னர் மெராபோக்–சிந்துமின் வழியாக சாபாவுக்குள் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
