இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவின் துணைக் காவல்படை அதிகாரிகளுக்கான புதிய மாதக் குறைந்தபட்ச ஊதியமான 2,000 ரிங்கிட்டை நடைமுறைப்படுத்துவது அந்தந்த முதலாளிகளாலேயே தீர்மானிக்கப்படும் என்று மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் குற்றத் தடுப்பு, சமூகப் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநர் (தடுப்பு நடவடிக்கைகள்/ஆதரவு வள ஒருங்கிணைப்பு) நிக் ரோஸ் அஸ்ஸான் நிக் அப் ஹமீது இந்தத் தகவலை வெளியிட்டார்.
துணைக் காவல்படை பல்வேறு தனித்தனி அமைப்புகளைச் சேர்ந்தது என்றும் அது அரச மலேசியக் காவல்துறையின் அதே திட்டத்தின்கீழ் செயல்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“இருப்பினும், அமலாக்க அதிகாரிகளின் நலனில் அரச மலேசியக் காவல்துறை மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், இவ்விவகாரத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தொடர்ந்து உரிய கவனம் செலுத்தும் என்று நம்புகிறது. இத்தகைய அமலாக்க அதிகாரிகளின் நலனை மலேசியக் காவல்துறை உறுதி செய்யும் அதேவேளையில், இறுதி முடிவு அந்தந்தத் தனிப்பட்ட நிறுவனங்களையே சார்ந்துள்ளது.
தனியார் துறை நிறுவனங்கள் அவற்றின் குறைந்தபட்ச ஊதியத்தைத் தரநிலைப்படுத்த வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டால், அத்தகைய ஆணைக்குக் கட்டாயம் இணங்க வேண்டும். அமலாக்க அதிகாரிகளின் நலன் பாதுகாக்கப்படுவதை மலேசியக் காவல்துறை உறுதி செய்யும்,” என்று சன்வே பிக்பாக்ஸ் ஹோட்டலில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 12) நடைபெற்ற 37ஆவது மலேசியத் துணைக் காவல்படைச் சங்க மாநாட்டில் செய்தியாளர்களிடம் திரு நிக் ரோஸ் தெரிவித்தார்.
