கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் சீனப் பிரதமர் லீ சியாங்கும் இருதரப்பு உத்திபூர்வ ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் கண்டுள்ளனர்.
குறிப்பாக, மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் (ஜிசிசி)- சீனா உச்சநிலை மாநாட்டின் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் இணங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு (2025) ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள நாடு என்ற முறையில், வருங்கால வட்டார ஒத்துழைப்பு தொடர்பில் சீனாவின் கடப்பாட்டை மலேசியா பாராட்டுவதாகத் திரு அன்வார் கூறினார்.
“ஆசியான் உச்சநிலை மாநாடு 2025க்கு இடையே சீனப் பிரதமரைச் சந்தித்தபோது, பொருளியல், ஹலால் துறை, வர்த்தகம், போக்குவரத்து (குறிப்பாக ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்பு), புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தினோம்,” என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்குச் சீனா வழங்கும் ஆதரவிற்குத் தாம் நன்றி தெரிவித்ததாக அவர் சொன்னார்.
“இந்த ஒத்துழைப்பு மலேசியா, சீனா, ஆசியான் ஆகிய தரப்புகளுக்கு நன்மை அளிப்பதுடன் வட்டாரப் பொருளியல் வளர்ச்சியையும் பேணும்,” என்றார் திரு அன்வார்.
முன்னதாக, சீனப் பிரதமர் லி செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் சென்றடைந்தார். முதலாவது ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சநிலை மாநாட்டிலும் இரண்டாவது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாட்டிலும் அவர் கலந்துகொள்வார்.
வட்டார அளவிலும் இதர வட்டாரங்களுடனும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உத்திபூர்வ தளமாக இந்த உச்சநிலை மாநாடுகள் விளங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை மாலை திரு அன்வார் வழங்கும் விருந்து நிகழ்ச்சியில் ஆசியான் தலைவர்களுடன் சீனப் பிரதமரும் கலந்துகொள்கிறார்.