கோழிச் சோறு விற்பனைக் கடையில் சரளமாகத் தமிழ் பேசி பிரபலமான மலேசிய சீனப் பெண்

கோழிச் சோறு விற்பனைக் கடையில் சரளமாகத் தமிழ் பேசி பிரபலமான மலேசிய சீனப் பெண்

2 mins read
bb122a4d-7e10-4234-b222-fcd5dcc73450
குமாரி லினெட் லீ. - படம்: இன்ஸ்டகிராம்/ 215 பெங் ஹுவாட் சிக்கன் ரைஸ்.

காணொளி ஒன்று இன்ஸ்டகிராமில் அதிகம் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மலேசியப் பெண் ஒருவர் பிரபலமாகி வருகிறார்.

மலேசியாவின் பினாங்கில் உள்ள தனது பெற்றோரின் கோழிச் சோறு (Chicken Rice) விற்பனைக் கடையில் சீனப் பெண் தனது வாடிக்கையாளர்களுடன் தமிழில் உரையாடுகிறார்.

கடந்த ஜனவரி 28 அன்று பதிவிடப்பட்ட காணொளியில், ஒரு வாடிக்கையாளரிடம் கோழிச் சோற்றில் ‘சாஸ்’ ஊற்ற வேண்டுமா என்றும் உணவோடு காய்கறிகளும் வைக்க வேண்டுமா என்றும் தமிழில் குமாரி லினெட் லீ கேட்கிறார்.

இந்தப் பதிவு 11,600க்கும் அதிகமான விருப்பங்கள் (Likes), கருத்துகளைப் பெற்றுள்ளதுடன், “உங்கள் தமிழ் மொழி உணர்வைக் கண்டு வியந்துபோகிறோம்,” எனப் பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

மற்றொரு காணொளியில், சட்டத்துறை பட்டதாரியான அவர், குழுவாக வந்திருந்த வாடிக்கையாளர்களிடம் “நீங்கள் அனைவரும் ஒன்றாக வந்துள்ளீர்களா?” என்றும் “கோழித் துண்டுகளில் உள்ள எலும்புகளை நீக்கிவிட்டுத் தர வேண்டுமா?” என்றும் சரளமாகத் தமிழில் கேட்கிறார்.

மற்றொரு பதிவில், “நீங்கள் எப்படித் தமிழ் கற்றுக்கொண்டீர்கள்,” என்று ஒரு பயனர் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் குமாரி லீ கூறியபோது, “என்னையும் எனது நான்கு சகோதரர்களையும் குழந்தைகளைப் பராமரிக்கும் (Babysitter) ஓர் இந்திய மாது வளர்த்தார். இதனால், தினமும் தமிழ் மொழியைக் கேட்கவும் பேசவும் வேண்டிய சூழல் இருந்தது.

“எங்களுக்கு விவரம் தெரிந்தபோது, நாங்கள் இயல்பாகவே தமிழில் பேசவும் உரையாடவும் தொடங்கிவிட்டோம்,” என்று அவர் கூறினார்.

தன்னைக் கவனித்துக்கொண்ட பராமரிப்பாளரை ‘அம்மா’ என்று அழைக்கும் குமாரி லீ, அவரோடு பேசி வளர்ந்ததால், தமிழ் தனக்கு மிகவும் பிடித்த மொழியாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார்.

“பராமரிப்பாளர் வீட்டிலிருந்து எங்களது சொந்த வீட்டிற்கு நாங்கள் திரும்பிச் சென்றாலும், சகோதர சகோதரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தமிழிலேயே பேசிக்கொள்வோம்,” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

24 வயதான குமாரி லீக்கு தமிழ் மொழியுடன் ஆங்கிலம், மலாய், மாண்டரின் (சீனம்) ஆகிய மொழிகளும் சரளமாகத் தெரியும்.

தமது பெற்றோரின் கடைக்கு வரும் பல வாடிக்கையாளர்கள், தாம் சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே அங்கு வருவதாகவும், அவர்களுடன் தமிழில் பேசுவது ஒருவித நெருக்கத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது என்றார் குமாரி லீ.

இவர் தற்போது ஒரு சட்ட உதவியாளராகப் பணியாற்றி வருவதுடன், தனது சட்டப் பயிற்சி சான்றிதழ் தேர்வுக்காகவும் தயாராகி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்