கோலாலம்பூர்: சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் மலேசியப் பொருளியல் ஐந்து விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
அந்த விகிதம், எதிர்பார்த்தைவிட அதிகமாகும். நான்காம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி விகிதம் 4.8 விழுக்காடாகப் பதிவாகும் என்று அதிகாரபூர்வ கணிப்புகளில் முன்னுரைக்கப்பட்டது.
சேவை, உற்பத்தி, கட்டுமானத் துறைகள் தொடர்ந்து வளர்ச்சியடைவது சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் பதிவான பொருளியல் வளர்ச்சிக்குக் காரணம் என்று மலேசிய மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொருள், சேவை ஏற்றுமதிகள் வளர்ச்சிகண்டன.
காலாண்டு அடிப்படையில் பொருளியல் வளர்ச்சி 1.1 விழுக்காடு குறைந்தது. 2024ஆம் ஆண்டு முழுவதும் மலேசியப் பொருளியல் 5.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
“வருங்காலத்தில் உலகச் சூழல் சவாலானதாக இருக்கலாம். அதேவேளை, மலேசியாவின் வலுவான அடிப்படை பொருளியல் அம்சங்களின் உதவியுடன், முதலீட்டு நடவடிக்கைகள் நல்ல வளர்ச்சி காண்பது, எந்தச் சூழலிலும் குடும்பங்கள் செலவு செய்வது தொடர்ந்து சீராக இருப்பது, ஏற்றுமதிகதிகள் அதிகரிப்பது ஆகிய அம்சங்களே மலேசியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு மெருகூட்டும்,” என்று மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் விவரித்தார்.

