தும்பாட், கிளந்தான்: மலேசியாவின் கிளந்தான், திரங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பாகாங், பேராக் ஆகிய மாநிலங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நிலவரப்படி, 10,272 பேரிடம் நீரால் பரவிய நோயை மலேசிய சுகாதார அமைச்சு கண்டறிந்தது.
இதில் 6,730 பேரிடம் தீவிர சுவாசத் தொற்றும் 3,021 பேரிடம் தோல் தொற்றும் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார். 298 பேரிடம் தீவிர இரைப்பைக் குடலழற்சியும் (gastroenteritis) 190 பேரிடம் விழி வெண்படல அழற்சியும் (conjunctivitis) 13 பேரிடம் கை, கால், வாய்ப்புண் நோயும் 20 பேரிடம் பெரியம்மையும் கண்டறியப்பட்டது.
தற்காலிக நிவாரண மையங்களில் கண்டறியப்பட்ட அனைத்து தொற்று நோய்களும் கட்டுக்குள் இருப்பதை அமைச்சர் ஸுல்கிஃப்லி சுட்டினார்.
“அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், தொற்றுநோய் பரவலைத் தடுக்க தனிப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என சனிக்கிழமை (டிசம்பர் 7) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
வெள்ளத்தால் 121 சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார். அவற்றில் 56 கிராமப்புற மருந்தகங்கள், 34 சுகாதார மருந்தகங்கள், 19 பல் மருந்தகங்கள், ஐந்து மாவட்ட சுகாதார அலுவலகங்கள், ஆறு மருத்துவமனைகள் அடங்கும் என அவர் விவரித்தார்.
“தற்போது, 87 சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 31 நிலையங்கள் தங்களது சேவைகளை மாற்று நிலையங்களுக்கு இடமாற்றியுள்ளன,” என்றார் அவர்.