பெட்டாலிங் ஜெயா: பிரிட்டனின் முன்னணிச் சில்லு நிறுவனமான ‘ஆர்ம் ஹோல்டிங்ஸ்’ உடன் மலேசிய அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்த விசாரணையில், தம் மீது விரைவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்று மலேசியாவின் முன்னாள் பொருளியல் அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைமையகத்தில் மே 4ஆம் தேதி நேரில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கும்படித் தாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மலேசிய அரசாங்கத்துக்கும் ‘ஆர்ம் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மதிப்பு 1.11 பில்லியன் ரிங்கிட் (S$356 மில்லியன்) ஆகும். அதன் தொடர்பில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, மோசடி, நிர்வாகப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து விசாரிப்பதாக ஆணையம் கடந்த மார்ச் 4ஆம் தேதி தெரிவித்திருந்தது.
அந்த வழக்கு தொடர்பில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே ஆணையம் விசாரித்து வருவதாகத் திரு ரஃபிசி கூறினார்.
“அடுத்த வாரம் வாக்குமூலம் அளித்த பிறகு என்மீது தவறான தகவல்களைத் தந்தது அல்லது அமைச்சரவையை அவசரப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று வெள்ளிக்கிழமை (மே 1) வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடந்தால் நாட்டின் முன்னணித் தலைவர்கள் பலரும் சாட்சியங்களாக விசாரிக்கப்படுவர் என்று தாம் ஊகிப்பதாகவும் திரு ரஃபிசி கூறினார்.
"ஒரு விவகாரத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், அமைதியாக இருந்துவிட வேண்டும்; இல்லையெனில் இது போன்ற விசாரணைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்றார் அவர்.

