கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம், பேருந்து ஒன்றை விபத்துக்குள்ளாவதிலிருந்து காப்பாற்றிய லாரி ஓட்டுநருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.
பேராக் மாநிலத்தில் உள்ள மினோரா டன்னல் விரைவுச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை, லாரியைக் கொண்டு தடுத்துநிறுத்தினார் 40 வயது வோங் டக் மெங். அதன்மூலம், கடுமையான விபத்து நேராமல் பேருந்தில் இருந்த 21 பயணிகளும் தப்பித்தனர்.
வோங்கின் துணிச்சலான செயலைப் பாராட்டி, மலேசிய நாடாளுமன்றம், சான்றிதழுடன் 10,000 ரிங்கிட் மதிப்புள்ள காசோலையையும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அவருக்கு வழங்கியது.
சாலைப் பாதுகாப்பு மன்ற நிதியிலிருந்து வோங்கிற்கு அவை வழங்கப்பட்டதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக், இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் வோங் புத்திசாலித்தனமாய் நடந்துகொண்டதை மெச்சினார்.
“ஓட்டுநர் ஒருவரின் துரிதமான செயலால் கடுமையான விபத்து தவிர்க்கப்பட்டது. அதனால் பல உயிர்களும் காப்பாற்றப்பட்டன,” என்றார் திரு லோக்.
கெடாவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து, கோளாறு காரணமாக அதன் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்தது. மேடான பகுதியிலிருந்து கீழே வந்துகொண்டிருந்த பேருந்துக்குத் தமது லாரியின் மூலம் வோங் முட்டுக்கொடுத்தார்.
லாரியின் பின்புறத்தில் மோதினால் பேருந்தின் வேகம் குறையும் என்று யோசித்த அவர், சம்பவத்தின்போது அமைதியாக இருந்ததைத் திரு லோக் மெச்சினார்.
“பேருந்தின் வேகத்தைக் குறைத்தது மட்டுமின்றி அதை முழுமையாக நிறுத்தவும் வோங் உதவினார். லாரியின் பின்புறத்தில் மோதிய பேருந்தைச் சாலையின் பக்கவாட்டிற்கும் வோங் கொண்டுசென்றார்,” என்றார் அவர்.
பேருந்தைத் தமது லாரி மூலம் நிறுத்திய வோங்கின் செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. மேலும், லாரிக்குமுன் சென்றுகொண்டிருந்த வாகனங்களை எச்சரிக்க வோங் சமிக்ஞை ஒலியை எழுப்பியதையும் காணொளியில் காண முடிகிறது.

