தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் பிரதமர் மகாதீர் மீதான விசாரணைக்கு மலேசிய அரசக் குழு உத்தரவு

4 mins read
50de54a3-5e72-4ff8-ac27-035f3106c2d3
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது. - படம்: எஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மற்றும் அவரது முன்னாள் பக்கத்தான் ஹராப்பான் சகாக்களுக்கு இடையே, 2018ஆம் ஆண்டு பெட்ரா பிராங்கா தீவைச் சிங்கப்பூருக்கு வழங்குவது தொடர்பான சவாலை கைவிட மலேசியா எடுத்த முடிவு குறித்து அவருக்கு எதிராகத் துரோகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தக் குற்றச்சாட்டைத் தொடங்கி வைத்தார். டிசம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரச விசாரணை அறிக்கை, மகாதீர் நிர்வாகத்தின் கீழ் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டுகிறது. இது “தேசத்திற்கு மிகப்பெரிய துரோகம்,” என்று திரு அன்வார் வர்ணித்தார்.

“எங்கள் நிலத்தின் ஒவ்வோர் அங்குலத்துக்கும் நாம் இறுதிவரை போராட வேண்டும்,” என்று அவர் டிசம்பர் 6ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.

பிப்ரவரியில் திரு அன்வாரால் அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், (ஆர்சிஐ) “டாக்டர் மகாதீருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் தொடங்கலாம். தண்டனைச் சட்டப் பிரிவு 415 (பி) இன் கீழ் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 417, 418 இன் கீழ் அவர் தண்டிக்கப்படலாம்,” என்று பரிந்துரைத்தது. மேற்கூறப்பட்ட தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால், முன்பு திரு அன்வாரின் வழிகாட்டியாக இருந்து பகைவராக மாறிய டாக்டர் மகாதீர், மே 23, 2018 அன்று அமைச்சரவையால் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டதால், திரு அன்வாரின் மனைவியான அவரது அப்போதைய துணைப் பிரதமர் வான் அஸிசா வான் இஸ்மாயிலும் துரோகக் குற்றவாளியா என்று கேள்வி எழுப்பினார்.

“இது ஒரு துரோகப் பிரச்சினை என்று பிரதமர் அண்மையில் கூறினார். அப்படியானால், மே 2018 முதல் பிப்ரவரி 2020 வரை, ஏன் வான் அஸிசா இந்த ‘துரோகம்’ பற்றி பேசவில்லை? என்று அவர் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கேட்டார். பிப்ரவரி 2020ல் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. 22 மாத ஆட்சிக்குப் பிறகு அப்போதைய பிரதமர் மகாதீர் பதவி விலகினார்.

இருப்பினும், வான் அஸிசா மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளான அமானா நெகாரா, ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) ஆகியவற்றின் தலைவர்கள், “அமைச்சரவையைக் குறிப்பிடாமல்” மே 21, 2018 அன்று டாக்டர் மகாதீரின் முடிவு குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது என்று வலியுறுத்தியுள்ளனர். 2008ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றம் (ICJ) வெளியிட்ட தீர்ப்பின் மறுஆய்வு மற்றும் விளக்கத்திற்காக அனைத்துலக நீதிமன்றத்திற்கு அனுப்பிய மனுக்களை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“முடிவு எடுக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் அதனை அமைச்சர்களுக்குத் தெரிவித்தார்,” என்று டாக்டர் வான் அஸிசா, அமானாவின் தலைவர் முகமட் சாபு, டிஏபி-யின் தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் ஆகியோர் டிசம்பர் 12ஆம் தேதி ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர். அவர்கள் மூவரும் முன்னைய மகாதீர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.

“இது அமைச்சரவைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ள ‘பிற விவகாரங்களின்’ கீழ் தெரிவிக்க மட்டுமே இருந்தது. ஒரு முடிவை எட்டுவதற்கான விவாதத்திற்காக அல்ல. ஓர் அரசியல்வாதி என்ற முறையில், டாக்டர் மகாதீர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதை மற்றவர்களின் தோள்களில் சுமத்தக்கூடாது,” என்று அவர்கள் மேலும் கூறினர்.

டாக்டர் மகாதீர், டிசம்பர் 12ஆம் தேதி தமது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு பிரச்சினை “எழுப்பப்பட்டாலும், தெரிவிக்கப்பட்டாலும் அல்லது வெளிப்பட்டாலும்” அது தொடர்பான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அமைச்சரவை உறுப்பினர்களின் பொறுப்பு. அவர் தனது நினைவுபடி, “அந்த மூவர் உட்பட அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் எனது கருத்து/தகவலை ஏற்றுக்கொண்டனர்,” என்று கூறினார்.

நான் அப்போது அரசாங்கத்தின் தலைவராக இருந்ததால் இந்தப் பிரச்சினைக்கு நான் பொறுப்பேற்பதா என்றில்லை. அமைச்சரவை உறுப்பினர்களாக இருந்த அவர்கள் கூட்டாகப் பொறுப்பை ஏற்பார்களா என்பதே இப்போது கேள்வியாக உள்ளது,’‘ என்றார் டாக்டர் மகாதீர்.

2008ஆம் ஆண்டு இரு நாடுகளும் தங்கள் வட்டார தகராற்றை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற பிறகு, ‘பத்து புதே’ என்று மலேசியாவால் அழைக்கப்படும் பெட்ரா பிராங்காவின் இறையாண்மையை, தி ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றம் சிங்கப்பூரிடம் ஒப்படைத்தது.

இரு நாடுகளும் 2008ல் அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அதுவே இறுதியானது என்றும் தெரிவித்தன.

ஆனால் மலேசியா 2017ல், அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கின் கீழ், அனைத்துலக நீதிமன்றத்தின் 2008ஆம் ஆண்டு முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பத்தைத் தொடங்கியது. அதற்கு புதிய ஆதாரங்களை மேற்கோள்காட்டி. பின்னர் ஜூன் 2018ல் விசாரணை தொடங்கப்படுவதாக இருந்தது. இருப்பினும், டாக்டர் மகாதீர் மே 2018ல் பிரதமராகப் பதவியேற்றதும், அந்நடவடிக்கைகளை கைவிட முடிவு செய்தார்.

மலேசியாவின் மன்னரான ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், பிரதமர் அன்வார் மற்றும் 2018ல் மகாதீர் தலைமையிலான எதிர்க்கட்சியிடம் ஆட்சியை இழந்த அம்னோவின் தலைவர்கள், பெட்ரா பிராங்கா தீர்ப்பின் மறுஆய்வைத் தொடர வேண்டாம் என்ற முடிவு குறித்து டாக்டர் மகாதீரைக் குறைகூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்