இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைச் சீரமைக்க மலேசிய அரசாங்கம் 123 மி. ரிங்கிட் உதவி

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைச் சீரமைக்க மலேசிய அரசாங்கம் 123 மி. ரிங்கிட் உதவி

படம்: த சன்

22 Feb 2026 - 7:29 pm

2 mins read

ஈப்போ: பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மதானி அரசாங்கம் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் சீரமைப்புக்கு 123 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி இருப்பதாக மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் இங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

2025 டிசம்பர் வரை அந்தத் தொகையை அரசாங்கம் ஒதுக்கியதாகவும் மலேசியா முழுவதும் உள்ள 1,048 வழிபாட்டுத்தலங்கள் அதன் மூலம் பயனடையும் என்றும் அவர் கூறினார்.

வழிபாட்டுத் தலங்களைச் சீரமைத்துப் பொலிவூட்ட அந்த நிதி கைகொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநாட்டவும் சமூக நல்லிணக்கத்தைப் பேணவும் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதை இச்செயல் உணர்த்துவதாகவும் அமைச்சர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“வழிபாட்டுத் தலங்கள் என்பவை வெறும் கட்டடங்கள் அல்ல; போற்றுதலுக்குரிய மதிப்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதற்கான மையங்கள் அவை.

“எந்த ஒரு வழிபாட்டுத் தலமும் பழுதடைவதைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அவற்றைப் புறக்கணித்துவிடலாகாது.

“ஒவ்வொரு சமூகமும் பாதுகாப்பான, தேவையான வசதிகளைப் பெறும் தகுதிக்குரியது,” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிதி உதவி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் தைப்பிங்கில் உள்ள சீன மெதடிஸ்ட் தேவாலயம் குறிப்பிடத்தக்கது.

அதன் புதுப்பிப்புப் பணிகளுக்காக அரசாங்கம் அந்தத் தேவாலயத்துக்கு 250,000 ரிங்கிட் அளித்து உதவியதாக மலேசியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

புக்கிட் லாருட்டில் அமைந்துள்ள 121 ஆண்டு பழமையான அந்தத் தேவாலயம் நாட்டின் முதல் மெதடிஸ்ட் வழிபாட்டுத் தலமாகும்.

தேவாலயத்தின் சிதைந்த தரைப்பகுதிளைச் சீரமைக்கவும் புதிதாக மேல்மாடம் கட்டவும் அரசாங்க நிதி பயனளித்ததாக திரு இங்கா கூறினார்.

தைப்பிங்கிற்கு வருகை அளித்தபோது அவர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவழிபாட்டுத் தலம்சீரமைப்பு

தொடர்புடைய செய்திகள்