ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: 3 ஆண்டுகளில் 20,000 வேலைகள்

மலேசியப் பொருளியல் அமைச்சர் நம்பிக்கை

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: 3 ஆண்டுகளில் 20,000 வேலைகள்

2 mins read
cbc0eee8-e368-42a5-829f-2bfe619296b9
மலேசியாவில், புதன்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல, நிர்வாகக் கூட்டத்தில் பேசிய மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர் நஸ்ருல்லா. - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: ஐந்து ஆண்டுகளில் 20,000 திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் (JS-SEZ) இலக்கை மூன்று ஆண்டுகளிலேயே எளிதாக எட்டிவிட முடியும் என்று மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர் நஸ்ருல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எண்ணிக்கையை மட்டும் கருதாமல், முதலீட்டாளர்களின் வலுவான ஆர்வம், தரமான திட்டங்கள் மூலம் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று புதன்கிழமை (ஜூலை 1) ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல, நிர்வாகக் கூட்டத்தில் பேசிய அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் மலேசியாவின் பேரளவிலான தொழில்துறையையும், சிங்கப்பூரின் நிதி வலிமையையும் இணைத்து வட்டார உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என்றார் அவர்.

“இரு நாடுகளின் புவியியல் நெருக்கத்தை உற்பத்தித்திறனாக மாற்றும் திட்டம் இது. மலேசியாவின் பேரளவிலான தொழில்துறை, நில வசதி, போட்டித்தன்மைமிக்க செலவுக் கட்டமைப்பு ஆகியவற்றை சிங்கப்பூரின் நிதி வலிமை, உலகளாவிய இணைப்பு, மேம்பட்ட சேவை அமைப்பு ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கிறது.

“மலேசியா - சிங்கப்பூர் பங்காளித்துவத்தின் இந்த வாய்ப்பை, முதலீட்டாளர்கள், புரிந்து, பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு மோதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக, இந்தத் திட்டத்தில் இத்தாலி அதிக ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறினார்.

இந்தச் சூழ்நிலையை மலேசியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுபோல் தோன்றக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அதேவேளையில் வட்டார விநியோகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, இத்திட்டம் சிறந்த மாற்றாக அமையக்கூடும் என்றார் திரு அக்மல்.

சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான பெருந்திட்டத்துக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் பெருந்திட்டத்தை இணைந்து வெளியிட உள்ளனர். வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2026ல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்று திரு அக்மல் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடுகளை ஈர்ப்பதற்கான குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2025ல் இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 76.98 பில்லியன் ரிங்கிட் (S$24.4 பில்லியன்) முதலீடுகளில், ஏறத்தாழ 57 விழுக்காட்டுப் பணிகள் ஏற்கெனவே செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அவர் சுட்டினார்.

முன்னதாக மார்ச் 30 ஆம் தேதி வெளியிடப்படவிருந்த பெருந்திட்டம், கூட்டாட்சி முகமைகளின் ஒருங்கிணைப்பு, நிதி கட்டமைப்பை இறுதி செய்வதற்காக அமைச்சரவையால் ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஜோகூர்சிங்கப்பூர்சிறப்புப் பொருளியல் மண்டலம்பொருளியல்வேலைவாய்ப்புபுதிய வேலைகள்

தொடர்புடைய செய்திகள்