கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் புகைமூட்டம் மிகவும் மோசமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், கட்டுமானம், உணவு விநியோகம் உள்ளிட்ட வெளிப்புறங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
புகைமூட்டத்தால் கட்டுமானத் தொழிலாளர்களின் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தினக்கூலியான அவர்கள், வேலைக்குச் செல்லாவிட்டால் தங்களது அன்றாட வருமானத்தை முற்றிலும் இழக்க நேரிடும் என்று கவலை தெரிவித்தனர்.
புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகளுக்குத் தற்காலிக விடுமுறை விடப்பட்டாலும், உணவு விநியோக ஊழியர்கள், குப்பை அள்ளுபவர்கள் போன்ற தொழிலாளர்களுக்குப் போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை.
மலேசியாவில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களும், 600,000 விநியோக ஓட்டுநர்களும் உள்ளனர். அவர்கள் மோசமான சூழலிலும் வேலை செய்கின்றனர்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அபாயகரமான நிலையை அடைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.
தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரத் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. முதலாளிகள் உரிய முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்றும், ஆபத்தான வேலைகளை நிறுத்த வேண்டும் என்றும் அது கூறுகிறது. ஆனால், இந்த விதிகளின் அமலாக்கம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
உணவு விநியோகம் செய்யும் ராஜா முகமது, வெப்பத்தில் நீண்ட நேரம் முகக்கவசம் அணிவது மிகவும் சிரமம் என்கிறார். புகைமூட்டத்தால் அவருக்குக் காய்ச்சல் வந்தது. ஆயினும் வருமானம் போய்விடும் என்ற பயத்தில் அவர் மருத்துவச் சிகிச்சை பெறவில்லை.
மலேசியாவின் தொழில்சார் பாதுகாப்புச் சட்டம், புகைமூட்டம் குறித்துக் குறிப்பிட்ட விதிகளைக் கொண்டிருக்கவில்லை என்று மூத்த வழக்கறிஞர் ஜஹாபர்தீன் முகமது யூனுஸ் விளக்கினார்.
ஆபத்தான வேலைகளை மறுக்கத் தொழிலாளர்களுக்குச் சட்டம் அனுமதித்தாலும், சாதாரணப் புகைமூட்டம் அத்தகைய வரம்பிற்குள் உடனடியாக வருவதில்லை.
எனவே, காற்றின் தரத்தின் அடிப்படையில் முறையான புதிய தேசியக் கட்டமைப்பை விரைந்து உருவாக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கோருகின்றனர். அத்துடன் தொழிலாளர்களின் வருமானத்தையும் சட்டபூர்வமாகப் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
