நஜிப் எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிக்க மலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி

நஜிப் எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிக்க மலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி

படம்: ஏஎஃப்பி

10 Nov 2026 - 6:21 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளார். எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை அவர் வீட்டுக்காவலில் கழிக்க அனுமதித்து உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) புதிய ஆணையைப் பிறப்பித்தது.

முன்னதாக, நஜிப்பின் வீட்டுக்காவல் ஆணையை நடைமுறைப்படுத்தத் தேவையான 50 மில்லியன் ரிங்கிட் (US$12.3 மில்லியன்) அபராதத்தை அவரது அரசியல் கட்சியான அம்னோ செலுத்தியது.

அதனைத் தொடர்ந்து, அவர் நவம்பர் 6ஆம் தேதி காஜாங் சிறையிலிருந்து வெளியேறினார். ஆனால், மேலும் சட்டத் தெளிவு தேவைப்படுவதாகக் கூறி, சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு நஜிப் மாற்றப்படுவதை அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி தற்காலிகமாகத் தடுத்தார். இதனால் சில மணிநேரத்திலேயே அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே, நஜிப்பின் விடுதலை ஆணையை மறுஆய்வு செய்யக் கோரி அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

செவ்வாய்க்கிழமையன்று, முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், துணை அரசு வழக்கறிஞர் அஷ்ரோஃப் அட்ரின் கமருல், “அந்த விடுவிப்பு உத்தரவில் நீதிமன்ற விவரங்கள், தண்டனை வழங்கப்பட்ட தேதி, குற்ற விவரங்கள், அபராதம், சிறைத்தண்டனை காலம், சிறை ஆணை ஆகியவற்றில் பிழைகள் இருந்தன,” என்று தெரிவித்தார்.

அதனையடுத்து, “அபராதம் செலுத்தியதன் பேரில் நவம்பர் 6ஆம் தேதியிட்ட விடுதலை ஆணை இதன்மூலம் ரத்துச் செய்யப்பட்டு, புதிய ஆணையால் முழுமையாக மாற்றப்படுகிறது,” என்று நீதிபதி அஸ்லாம் ஜைனுதீன் தீர்ப்பளித்ததாக ஃபிரீ மலேசியா டுடே செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் வழங்கிய நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கு இணங்க, குறைக்கப்பட்ட ஆறாண்டுச் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை கோலாலம்பூரின் தாமான் டூட்டாவிலுள்ள இல்லத்தில் 2028 ஆகஸ்ட் 23 வரை நஜிப் வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அரச ஆணை அமலாக்கம் தொடர்பாக தேசிய அரண்மனைக்கும் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்திற்கும் இடையே இந்த அரிய மோதல் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஆக அண்மை அறிவிப்பு வெளிவந்துள்ளது.

நஜிப் சிறையிலிருந்து வெளியேறி வீட்டுக்காவலில் வைக்கப்படுவதை எதிர்க்கும் எந்தவொரு முயற்சியும் தனது அரச கட்டளையை மீறுவதாகும் என மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்சிறைமலேசியா