மலேசியக் குடிநுழைவுத்துறை அபராதத் தொகை: 91.78 மில்லியன் ரிங்கிட் வசூல்

மலேசியக் குடிநுழைவுத்துறை அபராதத் தொகை: 91.78 மில்லியன் ரிங்கிட் வசூல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Nov 2026 - 4:35 pm

2 mins read

புத்ராஜெயா: மலேசியாவில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை, குடிநுழைவுச் சட்டங்களை மீறிய 32,052 பேரிடமிருந்து மொத்தம் 91.78 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த மொத்தத் தொகையில், வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவது தொடர்பான விதிமுறைகளை மீறிய 2,459 முதலாளிகளிடமிருந்து 50.04 மில்லியன் ரிங்கிட்டும், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 29,593 வெளிநாட்டவர்களிடமிருந்து எஞ்சிய 41.74 மில்லியன் ரிங்கிட்டும் வசூலிக்கப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

குடிநுழைவுச் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தாமல், விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு எதிராகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

“வசூலிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகையில் 54.5 விழுக்காடு முதலாளிகளிடமிருந்து பெறப்பட்டதாகும். குடிநுழைவுச் சட்ட அமலாக்கத்தை வெறும் ஆவணமற்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல், வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான ஒழுங்குமுறைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கையாகவும் கருத வேண்டும் என்பதற்கு இந்த எண்ணிக்கை முக்கியச் சான்றாக அமைகிறது,” என அமைச்சர் சைஃபுதீன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

முறையான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் தங்கியிருக்கும் அல்லது வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் சைஃபுதீன், இது குடிநுழைவுச் சட்டங்களைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மேலாண்மை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொது அமைதி ஆகியவற்றோடும் தொடர்புடையது என்று மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகுடிநுழைவுஅபராதம்