மலேசிய குடிநுழைவு கியூஆர் குறியீட்டை சிங்கப்பூர் உட்பட 63 நாடுகள் பயன்படுத்தலாம்

2 mins read
6cc17eca-7d21-4805-89df-d30fac59b87b
மலேசியாவுக்குள் நுழையும் 63 நாடுகள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த பயணிகள் தானியங்கி முகப்புகளைப் பயன்படுத்துகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: 63 நாடுகள், நகரங்களைச் சேர்ந்த பயணிகள் மற்றும் நீண்டகால வருகை அனுமதிச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள், ஜனவரி 1, 2026 முதல் மலேசியாவின் எல்லைகளில் குடிநுழைவு அனுமதிக்காக கியூஆர் (QR) குறியீட்டு முறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் மார்ச் 4ஆம் தேதி தெரிவித்தார்.

சிங்கப்பூர், புருனை போன்ற தென்கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குக் குடிநுழைவுத் துறையின் கியூஆர் குறியீட்டு முறையை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திரு சைஃபுதீன் கூறினார்.

தற்போது, ​​குடிநுழைவு எல்லைகளில் மலேசியர்கள் மட்டுமே கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்துகின்றனர் என்று மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.

ஆனால் 63 நாடுகள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த பயணிகள் தானியங்கி முகப்புகளைப் பயன்படுத்துகின்றனர் என்று திரு சைஃபுதீன் கூறினார்.

மலேசியர்கள் ‘மைபோர்டர்பாஸ்’ (MyBorderPass) செயலி மூலம் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தலாம்.

தற்போது, ​​குடிநுழைவு முகப்புகளில் சுமார் 172 குடிநுழைவு அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் திரு சைஃபுதீன் கூறினார்.

“ஆனால், கியூஆர் குறியீட்டு முறை முழுமையாக நிறுவப்பட்டதும், 68 ஊழியர்கள் முகப்புகளில் இருப்பார்கள். கிட்டத்தட்ட 60 விழுக்காடு தொழிலாளர் குறைக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

ஜனவரியில் அதன் சோதனை முன்னோட்டம் தொடங்கியதிலிருந்து மொத்தம் 786,603 மலேசியர்கள் ‘மைபோர்டர்பாஸ்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுமார் 25 விழுக்காட்டு பயணிகள் குடிநுழைவை முடிக்க கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தினர். அதே வேளையில் 60 விழுக்காட்டினர் தானியங்கி முகப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். 40 விழுக்காட்டினர் நேரடி முகப்புகளைப் பயன்படுத்தினர் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

“இந்த அமைப்பின் செயல்திறன் சராசரி செயலாக்க நேரத்தால் அளவிடப்படுகிறது. குடிநுழைவைக் கடக்க கியூஆர் குறியீடு ஐந்து வினாடிகள் எடுக்கும். தானியங்கி முகப்புகளில் கடவுச்சீட்டு 15 வினாடிகள் எடுக்கும். அதே நேரத்தில் நேரடி முகப்புகளில் குடிநுழைவைக் கடப்பது வரிசை நீளத்தைப் பொறுத்தது,” என்று அமைச்சர் விளக்கியதாக தி ஸ்டார் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்