மன்னிப்பு வழங்க மலேசிய மாமன்னருக்கு முழு உரிமை உண்டு: அன்வார்

மன்னிப்பு வழங்க மலேசிய மாமன்னருக்கு முழு உரிமை உண்டு: அன்வார்

படம்: பெர்னாமா

21 Sep 2026 - 10:01 am

2 mins read

‌ஷா அலாம்: மன்னிப்பு வழங்குவது குறித்த இறுதி முடிவு ஒரு மாநிலத்தின் ஆட்சியாளரையோ மலேசிய மாமன்னரையோ பொறுத்தது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காக மனு சமர்ப்பிப்பதற்கு உரிமை உள்ளது என்றார் அவர்.

“நான் கூறியது என்னவென்றால், ஒவ்வொரு கைதிக்கும் மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு. அந்த உரிமையை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்,” என்று திரு.அன்வார் சொன்னார்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) ‌ஷா அலாமில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளுக்கான தேநீர் சந்திப்பில் அவர் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச் செயல்பாட்டில் பிரதமரின் ஆலோசனையும் தலைமைச் சட்ட அதிகாரியின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று திரு.அன்வார் கூறினார்.

இருப்பினும், தமது ஆலோசனை நஜிபுக்கு மன்னிப்பு வழங்கப் பரிந்துரைப்பதாகப் பொருள்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

“எனது ஆலோசனை அந்த முடிவுக்கு வழிவகுத்ததா? இல்லை. இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பற்றி நான் அவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டினேன். அபராதம் மிகவும் அதிகமாக இருப்பதையும் அமைப்பின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கை குறித்த தாக்கத்தையும் அனைத்துலக அளவில் நாட்டின் மீதான பார்வையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நான் நினைவுபடுத்தினே,” என்று திரு.அன்வார் தெரிவித்தார்.

பல விவகாரங்களில் பிரதமரின் ஆலோசனையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், மன்னிப்புக் குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் தன்னிச்சையான உரிமையும் ஆட்சியாளரிடமோ மாமன்னரிடமோதான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒருமுறை முடிவு எடுக்கப்பட்டால், அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்,” என்றார் மலேசியப் பிரதமர்.

நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு நஜிபின் மற்ற வழக்குகளில் சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்கமாட்டா என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நாங்கள் சரணடையவில்லை, சரணடையவும் மாட்டோம். நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவோம். 1எம்டிபி வழக்கு தொடர்கிறது. குடிமை வழக்குகளும் தொடர்கின்றன,” என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், நஜிபுக்கு நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பை வழங்கினார். இதன் மூலம், 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 வரை எஞ்சியிருக்கும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் இருந்து நிறைவேற்ற அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இஸ்தானா நெகாராவில் கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசு வட்டாரங்களின் 64வது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பு, நஜிப் 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$15.6 மில்லியன்) அபராதத்தைச் செலுத்துவதற்கும் இதர அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமன்னர்மாமன்னர்பிரதமர்அன்வார்அன்வார் இப்ராகிம்மன்னிப்புபொது மன்னிப்பு