கோலாலம்பூர்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள குச்சிங் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 16 வயது மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்கிய சம்பவம் குறித்து அமைச்சர் ஃபாத்திமா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்தைப் பொதுமக்கள் உரிய பொறுப்புணர்வுடனும் கருணையுடனும் அணுகவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பள்ளிச் சமூகத்தைப் பாதுகாக்க, வன்முறைச் சம்பவங்களைத் தீவிரமாகக் கருதவேண்டும் என்று மகளிர், சமூக நல்வாழ்வு மேம்பாட்டு அமைச்சுக்குப் பொறுப்பு வகிக்கும் ஃபாத்திமா குறிப்பிட்டார்.
காணொளியில் சம்பந்தப்பட்ட பதின்ம வயது மாணவர் இன்னும் வளரும் பருவத்தில் இருப்பவர் என்பதால், அவர் மீது கருணை காட்டப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டினார்.
“தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், அதற்காக ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் அவரை அவசரமாகக் கண்டிக்கவோ அவமானப்படுத்தவோ கூடாது,” என்று அமைச்சர் ஃபாத்திமா தெரிவித்தார்.
“ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அந்த வளரிளம் பருவ மாணவரைக் கண்ணியத்துடன் நடத்தித் தகுந்த வழிகாட்டுதலை வழங்க முடியும்,” என்று அவர் கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் தனது தனிமையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய ஃபாத்திமா, “ஒவ்வொரு குழந்தையும் கேட்கப்படவும், ஆதரிக்கப்படவும் தகுதியானவர். ‘எனக்கு யாரும் இல்லை’ என்று ஒருவர் கூறினால், அவருக்குத் தகுந்த ஆதரவைப் பெற நாம் உதவ வேண்டும்,” என்றார்.
தாக்குதல் சம்பவத்தின் காணொளிகளைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் ஊகங்களைத் தவிர்த்துக் காணொளிகளைப் பரப்புவதற்குப் பதிலாக அதிகாரிகளிடம் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பள்ளிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுடன், எந்தவொரு குழந்தையும் உதவியின்றி விடப்படக் கூடாது என்றார் ஃபாத்திமா.
மாணவர் கோடரியால் ஆசிரியரைத் தாக்கியதாகவும், பட்டாசுகளை வைத்திருந்ததாகவும் சரவாக் காவல்துறை ஆணையர் சைஃபுல்லிசான் இஷாக் அக்டோபர் 21ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.
