பெட்டாலிங் ஜெயா: மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள 12வது ஏபெக் (APEC) போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் மலேசியா சார்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்டம்பர் 21, 22) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, அவர் சீனாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வார் என்றும் அப்பயணம் முடிந்து மலேசியா திரும்பிய பிறகே அவர் தமது பொறுப்புகளிலிருந்து விலகுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் திரு லோக் இருதரப்புச் சந்திப்புகளில் கலந்துகொள்வார். அவரது பயணத்தின்போது இரண்டு முக்கியப் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையொப்பமாகும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
முதல் புரிந்துணர்வுக் குறிப்பு, நிலம், ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்து, தளவாடத் துறைகளை உள்ளடக்கிய, மலேசிய-சீன அரசாங்கங்களுக்கு இடையிலான விரிவான போக்குவரத்து ஒத்துழைப்பு தொடர்பானது. மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கும் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்கும் இடையிலான ஆகாயப் பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வுக் குறிப்பு இரண்டாவதாகும். விமானத் தகுதிநிலை, நிறுவனச் சான்றிதழ், பணியாளர் உரிமம், செயல்பாட்டுக் கண்காணிப்பு ஆகியவற்றில் இவை கவனம் செலுத்தும்.
பெய்ஜிங் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு திரு லோக் ஷாங்காய் சென்று, பிரதமர் அன்வார் இப்ராகிமின் பேராளர் குழுவுடன் இணைந்துகொள்வார்.
அதன்பின், தமது பதவி விலகல் தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக அவர் உடனடியாக மலேசியா திரும்புவார். இக்காலகட்டத்தில் அமைச்சின் அனைத்துச் செயல்பாடுகளும் பொறுப்புகளும் தடங்கலின்றி தொழில்முறைத் தரத்துடன் தொடரும் என்று அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்தது.
