புத்ராஜெயா: கார்டினியா பேக்கரிஸ் பொருள்களை உட்கொண்டதால் நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, மலேசியச் சுகாதார அமைச்சு ஆய்வகப் பகுப்பாய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது.
நாட்டின் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்திற்கு இணங்குவதை உறுதிசெய்ய, கோலாலம்பூரில் உள்ள கார்டினியா தொழிற்சாலையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடகங்களிலும் செய்தி அறிக்கைகளிலும் பரவிவரும் புகார்கள் தொடர்பாக முதற்கட்டப் புலன்விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
குறிப்பாக, கார்டீனியா ஒரிஜினல் கிளாசிக் வெள்ளை ரொட்டி, டுவிக்கிஸ் சாக்-அ-லாட் ஆகிய இரண்டையும் உட்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சு விளக்கம் கோரியது.
தயாரிப்பு நடைமுறைகளிலிருந்து விலகல், செய்முறை மாற்றங்கள் அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் எதுவும் தனது விசாரணையில் கண்டறியப்படவில்லை என்று கார்டினியா நிறுவனம் தெரிவித்தது.
தொகுதி எண்களும் காலாவதித் தேதிகளும் முழுமையாக இல்லாததால், தயாரிப்புகளின் மூலத்தைக் கண்டறியும் தன்மை வரம்பிற்கு உட்பட்டதாக உள்ளது. இருப்பினும், புகார் அளித்தவர்களின் அனுமதியுடன் எஞ்சிய தயாரிப்புகளும் அவற்றின் பொட்டலங்களும் ஆய்வகப் பகுப்பாய்விற்காகச் சேகரிக்கப்பட்டன.
நிறுவனத்தின் முடிவுகள் அதன் சொந்த விசாரணையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்ட அறிகுறிகளின் காரணத்தைக் கண்டறிய அவை ஒரு திட்டவட்டமான இறுதி முடிவாக அமைய முடியாது என்றும் அமைச்சு வலியுறுத்தியது.
சட்டமீறல் அல்லது உணவுப் பாதுகாப்பு அபாயங்களுக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் தகுந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு உறுதியளித்தது.
குழப்பத்தை ஏற்படுத்தும் ஊகங்களைத் தவிர்க்குமாறு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது உடல்நலக் குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடி அருகிலுள்ள மாவட்டச் சுகாதார அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, ‘திரெட்ஸ்’ பயனீட்டாளர் ஒருவர் இரு கார்டீனியா தயாரிப்புகளை உண்டதால் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளானதாகக் கூறியது, சமூக ஊடகங்களில் பொதுமக்களின் கவனத்தையும் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் தூண்டியது.
