மூவார் - கோலாலம்பூர்: 200 கி.மீ. ஓடி எதிர்ப்பைப் பதிவுசெய்த எம்.பி.

மூவார் - கோலாலம்பூர்: 200 கி.மீ. ஓடி எதிர்ப்பைப் பதிவுசெய்த எம்.பி.

1 mins read
c02a2cee-2672-47ae-9d7a-8d5a4b7d78a6
ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய தமது ஓட்டத்தை ஜூலை 1ஆம் தேதி நிறைவுசெய்தார் சையது சாதிக் சையது அப்துல் ரகுமான். - படம்: சையது சாதிக் அப்துல் ரகுமான் / ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: ஜோகூரிலுள்ள மூவாரிலிருந்து கோலாலம்பூர் வரையிலான தமது 200 கிலோமீட்டர் ஓட்டத்தைத் திங்கட்கிழமை (ஜூலை 1) நிறைவுசெய்தார் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரான சையது சாதிக் சையது அப்துல் ரகுமான்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொகுதிகளுக்குப் போதிய நிதி ஒதுக்குவதில்லை எனக் கூறி, தமது எதிர்ப்பைப் பதிவுசெய்ய இந்தப் புதுமையான வழிமுறையைக் கையாண்டார் திரு சாதிக்.

கடைசி ஐந்து கிலோமீட்டர் ஓட்டத்தின்போது வான் அகமது ஃபைசால் வான் அகமது கமால், ரட்ஸி ஜிடின் என்ற மேலும் இரு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்துகொண்டனர்.

சென்ற மாதம் 28ஆம் தேதி தமது இந்த ஓட்டத்தைத் தொடங்கிய திரு சாதிக், 2,000 பேரிடமிருந்து 160,000 ரிங்கிட் (S$46,000) நிதி திரட்டினார். 100,000 ரிங்கிட் திரட்டுவதே அவரது இலக்காக இருந்தது.

மூவாரிலுள்ள தமது சேவை நிலையத்தை நடத்தவும், நல உதவித் திட்டங்களுக்கும், வசதிகுறைந்த மாணவர்களுக்குக் கற்றல் கருவிகள் வாங்கவும் அத்தொகை பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

நிதியுதவி வழங்கியும் உணவளித்தும் பலரும் ஆதரவளித்தது தமது மனத்தைத் தொட்டதாக அவர் கூறினார்.

“அவர்கள் எனக்கு ஊக்கமளித்தனர். அவர்கள் மூவாரில் இருந்ததில்லை என்றாலும் அவர்கள் இந்நாட்டை நேசிக்கின்றனர். அதனால்தான், இது மூவார் மட்டும் தொடர்புடையதன்று, மலேசியா முழுமைக்குமானது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் திரு சாதிக்.

முன்னதாக, ஒவ்வொரு தவணைக்காலத்திற்கும் ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது என்றும் ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்