கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பாலஸ்தீன ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.
புதன்கிழமை (அக்டோபர் 8) இரவு நடந்த அந்தப் பேரணியில் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரைக் கடுமையாகக் கண்டித்தார்.
“நாம் எதிர்த்து நிற்பது மாபெரும் இஸ்ரேலை! ஆனாலும், நாம் சிறிதும் அச்சப்படவோ கவலைப்படவோ இல்லை,” என்று திரு அன்வார் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில் பேசினார்.
திரு அன்வாரின் நடவடிக்கை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான உறவைப் பாதிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
காஸா-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிபர் டிரம்ப் முழுக்கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், இம்மாதம் நடக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் திரு டிரம்ப் கலந்துகொள்வதும் சந்தேகத்தில் உள்ளது.
ஆசியான் உச்சநிலை மாநாடு இம்மாதம் 26, 27, 28ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடக்கவுள்ளது.
இதற்கிடையே, மலேசிய எதிர்க்கட்சிகள் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்து இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.
மேலும், திரு டிரம்ப் மலேசியாவில் இருக்கும்போது பெரிய பேரணி நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அதிபர் டிரம்ப்புக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்யப்போவதில்லை என்று திரு அன்வார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.