ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் பெர்சாத்து கட்சியின் முன்னாள் கிளைத் தலைவர் டான் லெக் காங், துப்பாக்கிப் பயிற்சியின்போது தவறுதலாகத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
இதனால், 40 வயதான டானின் நெஞ்சுப் பகுதியில் தோட்டா பாய்ந்தது. இச்சம்பவம் கோத்தா திங்கியில் ஏப்ரல் 28ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிவாக்கில் நடந்தது.
“பயிற்சி முடிந்தவுடன் துப்பாக்கியில் இருந்த தோட்டாக்களைத் திரு டான் வெளியேற்றியுள்ளார். அப்போது, அவர் தவறுதலாகத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்,” என்று ஜோகூர் காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டது.
“தோட்டா திரு டானின் இடப்பக்க நெஞ்சில் பாய்ந்தது. அதனால், அவர் சுயநினைவை இழந்தார். பின்னர், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தோட்டா வெளியேற்றப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது,” என்று அதிகாரிகள் கூறினர்.
திரு டானிடம் துப்பாக்கிப் பயன்படுத்தத் தேவையான உரிமம் இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒன்பது பேரிடமும் வாக்குமூலம் வாங்கிக்கொண்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பயிற்சியின்போது ஏதேனும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

