கோலாலம்பூர்: உலகின் ஆகப் பெரிய மலர்களில் ராஃபிள்ஸியாவும் ஒன்று. இவ்வகை மலர்கள் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன.
ராஃபிள்ஸியா மலரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியா, 1957ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
அதற்கு முன்பு அது மலாயா என்று அழைக்கப்பட்டது.
மலாயா, பிரிட்டிஷ் காலனிகளில் ஒன்றாக இருந்தது.
நவீன சிங்கப்பூரை நிறுவிய சார் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸின் பெயர் மலருக்கு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, காலனித்துவ நிழலிருந்து விடுபட அவ்வகை மலரின் பெயரை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான வான் அகமது ஃபைசால் வான் அகமது வலியுறுத்தியுள்ளார். இவர் கிளந்தான் மாநிலத்தில் உள்ள மாச்சாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

