சொந்த கட்டுமானத் தொழில்நுட்பத்தை உருவாக்க மலேசியப் பிரதமர் வலியுறுத்து

சொந்த கட்டுமானத் தொழில்நுட்பத்தை உருவாக்க மலேசியப் பிரதமர் வலியுறுத்து

படம்: இபிஏ

10 Nov 2026 - 4:22 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியா, வெளிநாட்டுக் கட்டுமானத் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதைத் தாண்டி சுயமாக அவற்றை உருவாக்கி, உற்பத்தி செய்யவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மேலும், அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்யவும் மலேசியா முயலவேண்டும் என்றார் அவர்.

வெளிநாட்டு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக கட்டுமானத் தொழில்நுட்பங்களை உருவாக்கி, அவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதில் உள்ளூர் நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபடவேண்டும் என்று திரு அன்வார் அறிவுறுத்தினார்.

அனைத்துலகக் கட்டுமான வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

வேறோர் இடத்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்திசெய்யப்படும் கட்டடப் பாகங்கள் பின்னர் உரிய இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு பொறுத்தப்படும் கட்டுமான முறை குறித்து திரு அன்வார் அதிகம் வலியுறுத்தினார்.

வலுவான உள்நாட்டு உற்பத்தித் திறன்கள், முதலீடு, சந்தைத் தேவை, சாதகமான கொள்கை, தனிக்கைச் சூழல் ஆகியவை மூலம் நவீன கட்டுமான முறைக்கான திட்டம் ஆதரிக்கப்படவேண்டும் என்றார் அவர்.

முப்பரிமான கான்கிரிட் அச்சுத் தொழில்நுட்பம் குறித்து வேலைகள் அமைச்சும் கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரியமும் எடுத்துள்ள முயற்சிகளைத் திரு அன்வார் பாராட்டினார்.

உள்ளூர் அளவில் தொழில்நுட்பத் திறன்களை உருவாக்க அது முக்கியப் படி என்று அவர் மேலும் சொன்னார்.

பிற நாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுவந்தாலும் அதுபோன்ற புத்தாக்கங்களை உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதிலும் மலேசியா கவனம் செலுத்தவேண்டும் என்று திரு அன்வார் சுட்டினார்.

“மேற்கிலும் கிழக்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், அதேவேளை உள்ளூர்த் தேவைகளை அவைப் பூர்த்திசெய்பவையாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும்,” என்று திரு அன்வார் சொன்னார்.

மலேசிய நகரங்கள் லண்டனிலோ நியூயார்கிலோ உள்ள கட்டடங்களை அப்படியே பிரதிபலிக்கக்கூடாது என்ற விளக்கம் அளித்த அவர், உள்ளூர் சூழலுக்கு ஏற்ப அவை இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்