மலேசியாவில் உள்ள ஓர் உணவகம், 'ஏஷியன் நாச்சோஸ்' என்ற பெயரில் அப்பளத்தை 25 ரிங்கிட்டிற்கு விற்றதற்காக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
டுவிட்டர் பயனரான சமந்தா, தனது பக்கத்தில் உணவு விலைப் பட்டியலின் படத்தைப் பகிர்ந்து, "சமையற்கலையில் குற்றம் அரங்கேறியுள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.
படத்தில் இருந்த தட்டில், மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அப்பளம் இருந்தது. அப்பளத்தை தொட்டு சாப்பிட அவகாடோ (வெண்ணெய் பழம்), காரமான புளிச்சாறு, பொறிக்கப்பட்ட சின்ன வெங்காயம் கலவையில் செய்யப்பட்ட ஒரு 'டிப்' அடங்கும் என்று அந்தப் பதிவு கூறியது.
அப்பதிவு பகிரப்பட்டது முதல், 7,000 பயனர்கள் விருப்பக்குறிகளைப் பதிவுசெய்துள்ளனர். மேலும், 437,000 பார்வைகளை அப்பதிவு பெற்றுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள அந்த உணவகத்தின் பெயர் 'ஸ்னிட்ச் பை தி தீவ்ஸ்' என்று அழைக்கப்படுவதாக டுவிட்டர் பயனர் ஒருவர் கூறினார்.
உணவகத்தின் இணையத்தளத்தின்படி 'ஏஷியன் நாச்சோஸ்' உணவின் விலை 25 மலேசிய ரிங்கிட் (ரூ.500) என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

